சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில், தமிழ்நாட்டில் 99.61% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதால் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மாணவி ஹரினி 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில், தமிழ்நாட்டில் 99.61% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. சென்னையை அடுத்து, ஆந்திரப் பிரதேசத்தில் 99.44% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2வது இடத்தையும் கேரளாவில் 99.30% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து 62,260 மாணவர்கள் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். அதில் 62,019 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 99.85% மாணவிகளும் 99.42% மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் மண்டல வாரியாக தேர்ச்சி சதவிகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.28% மாணவர்கள் தேர்ச்சி பெற்றதால் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மண்டலம் 98.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த ஹரிணி என்ற மாணவி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆங்கிலம், இந்தி, கணிதம், அறிவியல் ஆகிய 4 பாடங்களில் ஹரிணி முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
மாணவி ஹரிணி தான் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றது குறித்து ஊடகங்களிடம் கூறுகையில், “நான் பாடங்களைப் நன்றாக புரிந்து கொண்டு மீண்டும் மீண்டும் படித்தது எனக்கு அதிக மதிப்பெண்கள் பெற உதவியது. ஒன்பதாம் வகுப்பில் இருந்தே நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறேன்” என்று கூறினார். மேலும், தான் எப்போதும் மற்றவர்களுக்கு உதவ விரும்புவதாகவும் என் பெற்றோர், டாக்டர்கள் இருவரும் எனக்கு உத்வேகம் அளித்தனர் என்று கூறினர். மேலும், ஹரிணி, ஓய்வு நேரங்களில் இசையை விரும்பி கேட்பதாகக் கூறினார்.
அதே போல, சென்னை நங்கநல்லூரில் உள மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த லாவன்யா வாசுதேவன் என்ற மாணவி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி லாவன்யா வாசுதேவன் தன்னை ஆசிரியர்கள் உற்சாகப்படுத்தி எப்போது கேட்டாலும் என்னுடைய சந்தேகங்களுக்கு பதிலளித்தனர் என்று தெரிவித்தார்.
சென்னையில் உள்ள பல சிபிஎஸ்இ பள்ளிகளில் பல மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வில் கணிதத்திலும் சமஸ்கிருதத்தில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"