CBSE Schools Homework Restrictions: சிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி. வகுத்த பாட புத்தகங்கள் தவிர, தனியார் பாட புத்தகங்களை பயன்படுத்துவதாகக் கூறி, வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், முதல் வகுப்பு குழந்தைகளுக்கு கூட வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்து இருந்தார். தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் எந்த விதிகளும் இல்லாமல் கூடுதல் பாடப்புத்தகங்களை வாங்க நிர்பந்தம் செய்வதாகவும், எனவே என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை விட கூடுதலாக புத்தகங்களை படிக்க தடை விதிக்க வேண்டும், கூடுதல் பாடங்களை எடுக்க தனியார் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த சிபிஎஸ்இ, அனைத்து பள்ளிகளும் 2 ஆம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது, மேலும், அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தையும், பாட புத்தகத்தையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி இது தொடர்பாக, உரிய விளம்பரப்படுத்தும் படியும் அது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் அது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது என கூறி அது தொடர்பான சுற்றறிக்கையை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து நீதிபதி, சுற்றறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது, அதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பள்ளிக் குழந்தைகளின் புத்தக சுமையை 15% வரை குறைப்பது தொடர்பான ஒரு மாதிரி திட்டத்தை வகுத்து இருப்பதைப் போல தமிழகத்தில் ஏன் பின்பற்றக் கூடாது என கேள்வி எழுப்பினார்.
அதற்கு சிபிஎஸ்இ தரப்பு வழக்கறிஞர், இது சம்பந்தமாக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதி இந்த சுற்றறிக்கையை எப்படி அமல்படுத்தப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை சிபிஎஸ்இ அமல்படுத்தவில்லை என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
சிபிஎஸ்இ சுற்றறிக்கையும், உயர் நீதிமன்ற உத்தரவும் அமல்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி, 2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, மூன்று வாரங்களுக்குள் தேசிய மற்றும் மாநில மொழி பத்திரிகைகளில் இது தொடர்பான விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையின் போது சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் இரண்டாம் வகுப்பு பொது அறிவு பாடப் புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் பற்றி கேள்வி இடம்பெற்றுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.
அதற்கு நீதிபதி கிருபாகரன், நாட்டில் முதன்மையான கல்வி வாரியமாக விளங்கக்கூடிய சிபிஎஸ்இ யின் தரம் எங்கே? என கேள்வி எழுப்பிய நீதிபதி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் விதிகளை முறையாக சிபிஎஸ்இ பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.