CCTV cameras should be placed on the ballot boxes storing area : தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்றும், 30ம் தேதியும் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட உள்ளன.
இன்றைய தேர்தலில் ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் தெரிவித்தும், மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்து ஐந்து நாட்களுக்கு பிறகே, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், அதுவரை, வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதும், நேர்மையாக, நியாயமாக வாக்கு எண்ணிக்கை நடத்துவதுன் மாநில தேர்தல் ஆணையத்தின் கடமை என தெரிவித்துள்ளது.
மேலும், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கான வாக்குகளும் ஒரே பெட்டியில் போடப்படுவதாகவும், அவற்றை தனித்தனியாக பிரித்து எண்ணும் போது, முறைகேடுகள் நடக்காதபடி, உள்ளாட்சி தேர்தல் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அனைத்து நடைமுறைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அனுமதிக்கவும் கோரியுள்ளார். இந்த மனு வரும் 30ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.