கோவை போத்தனூர் சாரதா மில் ரோட்டில் நேற்று நள்ளிரவில் 3 செல்போன் கடைகளில் அடுத்தடுத்து திருட்டு – சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
கோவை போத்தனூரில் நேற்று நள்ளிரவில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 கடைகளில் செல்போன்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை போத்தனூரை சேர்ந்தவர் புண்ணியகோடி. இவர் சாரதா மில் ரோட்டில் பிகே மொபைல்ஸ் என்ற பெயரில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன் தினம் வழக்கம் போல் வியாபாரத்தை கவனித்தவர் இரவு 10:15 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்தனர். அதில் நள்ளிரவு 12:45 மணியளவில் கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் செல்போன்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் அவர் யார் என தேடி வருகின்றனர்.
இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. மேலும் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் நேற்று முன் தினம் இரவு ஒரே நாளில் அடுத்தடுத்து மேலும் 2 செல்போன் கடைகளில் திருடு போனதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 3 செல்போன் கடைகளில் திருடு போன சம்பவம் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் உரிமையாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்