சென்னை ஐஐடியில் பேராசிரியர்களின் மத ரீதியான பாகுப்பாட்டால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் மாணவி பாத்திமாவின் சகோதரி, உறவினர்களிடம் விசாரிப்பதற்காக மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் கேரளா சென்றுள்ளனர்.
சென்னை ஐஐடியில் மானிடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் படித்துவந்த மாணவி பாத்திமா லத்தீஃப் நவம்பர் 9 ஆம் தேதி ஐஐடி வளாகத்தில் உள்ள சரயு விடுதியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
பாத்திமாவின் தற்கொலைக்கு காரணம் சென்னை ஐஐடியில் நிலவும் சாதி, மத ரீதியான பாகுபாடுகளே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பாத்திமாவின் சகோதரி ஆயிஷா அவருடைய போனில் பாத்திமா தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய குறிப்பில், தனது தற்கொலைக்கு காரணம் மூன்று பேராசிரியர்கள் என அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை ஐஐடியில் நிலவும் சாதி, மத ரீதியான பாகுபாட்டைக் கண்டித்தும் மாணவி பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி பாத்திமா மரணம் குறித்து விசாரித்து வந்த கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து, இந்த வழக்கு மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதனிடையே பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் கேரளாவில் சென்னை வந்து தமிழக முதல்வர் பழனிசாமி, டிஜிபியை சந்தித்து புகார் அளித்தார். மேலும், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதற்கு காரணம் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் காரணம் என்று குற்றம்சாட்டினார்.
மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் சென்னை ஐஐடி நிர்வாகத்திடமும் குற்றம் சாட்டப்பட்ட 3 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், சென்னையில் உள்ள கேரளா இல்லத்தில் தங்கியிருந்த பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃபிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், நேற்று பாத்திமாவின் தற்கொலையில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர்கள் சுதர்சன் பதமநாபன், ஹேமசந்திர காரா, மிலிந்த் பிரம்மம் ஆகிய மூன்று பேருக்கும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக சொல்லி அவர்களிடம் விசாரித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் பாத்திமா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவருடைய தாய் மற்றும் சகோதரிடம் ஐஐடியில் தான் எதிர்கொண்ட துன்புறுத்தல்கள் பற்றி என்ன பகிர்ந்துகொண்டார் என்று விசாரிப்பதற்காக ஒரு குழுவினர் கேராளா சென்றுள்ளனர். கேரளா சென்றுள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சிறப்புக் குழுவினர், அங்கே பாத்திமாவின் தாய், சகோதரி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றனர்.