க. சண்முகவடிவேல்
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க சிறப்பான வெற்றியை பெறும் என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் கடந்த மூன்று நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சி துவாக்குடி என்.ஐ.டி.யில் மாணவர் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். பின்னர் பாஜக நிகழ்வுகளில் பங்கேற்ற பிறகு இன்று திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சி மாவட்ட புதிய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
இந்தியா முழுவதும் புதிய கல்விக் கொள்கை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சிறப்பாக பின்பற்றுகிறது. புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம் என தமிழ்நாடு அரசு தெரிவித்தாலும், எழுத்து பூர்வமாக அவர்கள் எதிர்க்கவில்லை. புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அறிக்கையை சமர்பித்து வருகிறார்கள்.
ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு மிரட்டுவதாக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழக ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை மிரட்டவில்லை. அனைத்து அதிகாரிகளையும் சமமாக நடத்துகிறோம் என்பதே உண்மை. மேலும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க சிறப்பான வெற்றியை பெறும் அதில் திருச்சி மாவட்டத்தின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும்.
மேலும், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் நவயோதயா பள்ளிகள் அமைக்கப்படும். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் கேட்பவர்களுக்கு நமது பள்ளிகள் அமைத்து தரப்படும். மத்திய பல்கலைக்கழகத்தின் கிளை திருச்சியில் கொண்டு வருவதற்கு தமிழக அரசு நிலம் கொடுத்தால் அது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil