சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட திட்ட பணிகளுக்காக நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம், பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் இது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், ரயில் மற்றும் பஸ் போக்குவரத்திற்கு இணையாக மெட்ரோ ரயில் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், 3-வது வழித்தடத்திற்கான பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டிய மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளில் தோய்வு ஏற்பட்ட நிலையில், கடந்த வாரம் டெல்லி சுற்றுப்பயணம் சென்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்களை முன் வைத்தார். அதில், மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்காக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியானது.
தற்போது முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக, ரூ63,246 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷனவ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சென்னையில் விரைவில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் சேவை பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“