மறைந்த தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடலில் ரூ.80 கோடி மதிப்பில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. கருணாநிதி தமிழ் மொழிக்கு செய்த சிறப்பு, அவரின் எழுத்தாற்றல் ஆகியவற்றைப் போற்றும் வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதாக தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து கடலில் சின்னம் அமைப்பதற்கு அ.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியிருந்தது. அதேபோல், பேனா நினைவுச் சின்னத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தமிழ்நாடு அரசின் பொதுப் பணித் துறை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவிடம் தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்று கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
15 நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கட்டுமானத்திற்கு நிலத்தடி நீரை பயன்படுத்த கூடாது உள்ளிட்ட 15 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil