காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் உட்பட நான்கு மாநில அரசுகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது மத்திய அரசு.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதில், தமிழகத்துக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அளவில் இருந்து 14 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டதுடன், 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. வரும் மார்ச் 20-ம் தேதிக்குள் அந்த வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை இணைஅமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நேற்று சென்னைக்கு வந்திருந்தார். அவரிடம் நிருபர்கள் காவிரி மேலாண்மை அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும், காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கவும், 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநில பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். மார்ச் 9ல் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.