கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ.வு.க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்திருந்த நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய என்.ஐ.ஏ.வு.க்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,
கோவை கோட்டை மேடு பகுதியில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் விபத்தா அல்லது திட்டமிட்ட தற்கொலைப்படை தாக்குதலா என்பது தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்தில் பலியாக ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த சம்பவம் கோவை மட்டுமல்லாமது தமிழக அரளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழத்தின் கொங்கு மண்டலமான சேலம் ஈரோடு கோவை ஆகிய மாவட்டங்கள் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது என்றும், இந்த வழக்கு தொடர்பான என்.ஐ.ஏ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார். இது தொடர்பான அரசானை நேற்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசும் இந்த வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு துறைக்கு (என்.ஐ.ஏ) உத்தரவிட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்கியுள்ளது.
இதற்காக கோவை வந்துள்ள என்.ஐ.ஏ. டி.ஐ.ஜி. கோவையில் முகாமிட்டுள்ளனர். என்.ஐ.ஏ. விசாரணையின் முடிவில் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார், சம்பவத்திற்கு காரணம் என்ன என்பது தொடர்பான உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை சம்பவம் தொடர்பான நெல்லையில், முகமது உசேன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய பிரச்சார இயக்கத்தில் உள்ள முகமது உசேன் அவ்வப்போது கோவை சென்று வந்ததாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil