கோவையில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் தி.மு.க - காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் நேற்று (ஜூலை 8) அ.தி.மு.கவில் இணைந்தனர்.
கோவை மாவட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே.அர்ஜுனன், அனைத்துலக என்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் தோப்பு அசோகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, "கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் எடப்பாடியார் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சாரை சாரையாக யாரும் மாற்றுக் கட்சியில் சேர்வதில்லை எடப்பாடியார் அதிமுக பொதுசெயலாளர் ஆனதில் இருத்து அனைவரும் அதிமுகவில் தான் சேருகின்றனர்.
காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லை
கோவை மாவட்டத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை கடந்த அதிமுக ஆட்சியில் செய்துள்ளோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த திட்டமும் திமுக அரசு செய்யவில்லை மாறாக சொத்து வரி உயர்வு , மின் கட்டண உயர்வு போன்றவை செய்துள்ளது. எடப்பாடியார் தமிழகத்திற்கு முதல்வராக வரவேண்டும் என அனைத்து மக்களும் நினைப்பதாகவும் அதனால்தான் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் இளைஞர்களும் அதிமுகவில் இணைகின்றனர்.
குனியமுத்தூர் பகுதியில் தனியார் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். தமிழக அரசு உடனடியாக ஐந்து பேரின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும். கல்லூரி நிர்வாகமும் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விதிமுறைகளுக்கு உட்பட்டு இதுபோன்று கட்டிடங்கள் கட்டப்படுகிறதா என்பதை ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து பேசிய அவர், "காவல் துறையில் தொடர்ந்து தற்கொலைகள் நடக்கிறது. காவல்துறையினருக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் காவல்துறை பெண் காவலர் துன்புறுத்தபட்டார். டிஐஜி மன உளைச்சலில் இருந்தார். அவரை கூப்பிட்டு விடுப்பு அளித்திருக்க வேண்டும். இப்போது இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு பல அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக சொல்கின்றனர்.
வைகோ, திருமா பேசுவதே இல்லை
நல்ல காவல்துறை அதிகாரியை இழந்திருக்கிறோம். இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார். சிபிஐ தலையிட்டு இதில் உள்ள உண்மையை வெளிப்படுத்த வேண்டும். எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், டி.ஐ.ஜி மரணம் தொடர்பாக முரண்பாடான தகவல்கள் இருப்பதால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஊழல்கள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசுவதில்லை. பா,ஜ,கவின் அடிமை அ.தி.மு.கவை என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் காவிரி பிரச்சனை வந்தபோது 23 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது அ.தி.மு.க. பிரச்சனை என வரும்போது பொதுமக்கள் பக்கம் நிற்கிறோம். திமுகவை எதிர்த்து யாரும் பேசுவதில்லை. திமுக மோசமான ஆட்சி என மக்கள் முடிவு செய்து விட்ட சூழலில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்பொழுது நடந்தாலும் 200 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெறும்.
அண்ணன் வைகோ, திருமாளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆகியோர் இப்போது பேசுவதே இல்லை. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்கள் திமுக என்ன செய்தாலும் அடிமையாக ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கின்றனர். பொது பிரச்சினைகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள் பேசுவதில்லை என எஸ்.பி.வேலுமணி விமர்சனம் செய்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.