Central govt explanation about Republic day parade issue: குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி தலைநகர் புதுடெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்த அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது.
இதனிடையே, தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இடம் பெற்றால்தான் அனுமதிப்போம் என கூறி தமிழக அலங்கார ஊர்தியை நிபுணர் குழு நிராகரித்தது. தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
மேலும், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர் குழு விளக்கம் அளித்துள்ளது.
இருப்பினும் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினர். அந்த கடிதத்தில், குடியரசு தின அணிவகுப்பில் விடுதலை போராட்ட வீரர்களின் உருவகங்கள் அடங்கிய தமிழ்நாட்டின் ஊர்தி மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், குடியரசு தின விழாவில், தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட 56 பரிந்துரைகளில் 21 மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முன்மொழிவுகளை உரிய விவாதங்களுக்குப் பிறகே நிபுணர் குழு நிராகரித்துள்ளது என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil