தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் ஏற்பட்டு பெரு மழை, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பல மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். சாலை, வீடுகளில் மழை நீர் புகுந்து கடும் பாதிப்படைந்தனர்.
3-4 நாட்கள் உணவின்றி, மின்சாரம் இன்றி தவித்தனர். அரசு, சமூக ஆர்வலர்கள் எனப் பலர் உதவி செய்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அரசு வெள்ள நிவாரணமாக ரூ.6,000 வழங்கியது. தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. அங்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்கியது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.38,000 கோடி நிவாரண நிதியாக கோரியிருந்தது. நிவாரண நிதி வழங்க கோரி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மத்திய அரசு இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 27) மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.275 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ.38,000 கோடி கோரியிருந்த நிலையில் வெறும் ரூ.275 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க கூட்டணியில் உள்ள மதுரை மக்களவைத் தொகுதி சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறுகையில், "கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்" என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “தமிழகத்தில் இதற்கு முன்பாக பலபுயல்கள் வந்துள்ளன. எந்த அரசு புயல் நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு புள்ளி விவரத்துடன் நிதி கேட்டபோது, குறைத்து தான் கொடுப்பார்கள். மத்திய அரசு கேட்ட நிதியை கொடுத்ததே கிடையாது. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது திமுக அரசு வாதாடி பெறவில்லை.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது எத்தனை புயல்கள் வந்தன. அப்பொழுது கேட்ட நிதியையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. வெள்ள பாதிப்பிற்கு போதிய நிவாரணத்தை தி.மு.க அரசு மத்திய அரசிடம் பேசி பெற வேண்டும்" என்றார்.
மேலும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் பேசுகையில், "சர் பிட்டி தியாகராயரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது என்றார். தொடர்ந்து, மத்தியில் ஆளுகின்ற தேசிய கட்சிகள் அதாவது காங்கிரஸ், பாஜக என யாராக இருந்தாலும் தமிழகத்திற்கு நிதி தருவதில்லை. யானை பசிக்கு சோளப் பொறி என்பது போல் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது.
தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது. தமிழக மக்கள் வரி கொடுப்பதில்லையா?... தமிழக மக்களின் வரிப்பணத்தை சரிசமமாக பகிர்ந்து கொடுங்கள். வடக்குக்கு ஒரு நீதி தெற்குக்கு ஒரு நீதி என இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தேசிய கட்சிகளால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் கிடையாது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“