முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக ஆகும்போது வி.சி.க தலைவர் திருமாவளவன் ஏன் முதல்வர் ஆக கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம், மற்றும் சமீபத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதல்வர் பதவி குறித்து பேசப்பட்ட விவகாரத்தில், மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் மற்றும் திருமாவளவன் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், திருமாவளவளை முதல்வர் ஆக்க நான் தயார் என்று சீமான் கூறியுள்ளது தற்போது சமூகவலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு பட்டியல் வகுப்பில் இருக்கும் அருந்ததியர் பிரிவினருக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அப்போதைய தி,முக. அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. அதே சமயம் இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு சமீபத்தில் திருமாவளவனை முதல்வர் ஆக்குவோம் இது எங்கள் கனவு என்று கூறியிருந்தார். அவரின் பேச்சு இணையத்தில் வைரலாக பரவியது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருமாவளவன் முதல்வர் கனவு நடக்காது. தி.மு.க. அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்குமா என்பது அக்கட்சி எடுக்க வேண்டிய முடிவு. சமூகநீதி குறித்து பேச திருமாவளவன் அருகதை அற்றவர். அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர், இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார். அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்தவர் எப்படி தலித் மக்களின் தலைவராக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருமாவளவன் முதல்வர் ஆவதற்கு அத்தனை தகுதிகளும் இருக்கு. அவரை ஆதரித்து எப்படியாவது முதல்வர் ஆக்குவோம். இது நடந்தால் என்னை விட மகிழ்ச்சியான நபர் யாரும் இருக்க முடியாது. முதல்வர் கனவு பலிக்காது என்று சொல்ல எல்.முருகன் யார்? அவர் 2 முறை மத்திய அமைச்சராக ஆகும்போது திருமாவளவன் முதல்வர் ஆக முடியாதா? என்று சீமான் கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“