அடுத்தாண்டு முதல் அந்தந்த மாவட்டங்களில் நீட் தேர்வு - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மாநில அரசின் பாடத்திட்டத்திலும் நீட் கேள்விகள் கேட்கப்படும்

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வில் சிபிஎஸ்இ தேர்வு பாடங்களில் இருந்து அதிகளவு கேள்விகள் கேட்கப்படுவதால் தமிழக மாணவர்களால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேக்கைக்கு கடந்த மே 6ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு 2018 -19ம் ஆண்டின் மாணவர்கள் சேர்க்கைக்காக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 136 நகரங்களில் அமைக்கப்பட்ட 2,255 தேர்வு மையங்களில் சுமார் 13 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். தமிழகத்தில் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வு எழுதினர்.

ஆனால், தமிழகத்தை சேர்ந்த சில மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் என வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், பெரும் சர்ச்சைகள் எழுந்தது. தமிழக அரசு பேருந்து, ரயில் என மாணவர்கள் செல்வதற்கு வசதிகள் செய்துக் கொடுத்தாலும், தமிழகத்தில் மையம் அமைக்காமல் வெளி மாநிலத்தில் ஏன் இடம் ஒதுக்கப்பட்டது? என்பதே பிரதான கேள்வியாக இருந்தது. முதலில் நீட் தேர்வே வேண்டாம் என்று போராடிய தமிழக மாணவர்கள், இந்த பிரச்சனைக்கு பிறகு, நீட் தேர்வை தமிழகத்தில் நடத்த அனுமதியுங்கள் என்று போராட வேண்டிய சூழல் உருவானது.

இந்தச் சூழ்நிலையில், சென்னை ஐஐடியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “வரும் ஆண்டு முதல் மாணவர்கள் அவர்களுடைய மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். மாநில அரசின் பாடத்திட்டத்திலும் நீட் கேள்விகள் கேட்கப்படும். நீட் கேள்விகள் தயாரிக்க நன்கு தமிழ் மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்கள் விரைவில்…

×Close
×Close