Advertisment

பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்; தமிழக மக்களிடம் மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா

தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை; பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு விவகாரத்தில் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கோரினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே

author-image
WebDesk
New Update
Union min Shobha.jpg

பெங்களூருவில் ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பின்போது தான் பேசிய பேச்சுக்காக மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்களுக்கு தொடர்பு உள்ளது என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மதுரையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர், மதுரை சைபர் கிரைம் போலீஸில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் இரு பிரிவினரிடையே கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா கரந்த்லஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன் கடந்த ஜூலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அமைச்சர் பத்திரிகையாளர்களை அழைத்து மன்னிப்பு கேட்டால், அவர் மீதான வழக்கை கைவிட அரசு தயாரா என்பதை அறிய விரும்புவதாக நீதிபதி தெரிவித்திருந்தார். அதற்கு மன்னிப்பு கடிதத்தை ஊடகங்கள் முன் மத்திய அமைச்சர் வாசித்தால், அவருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யலாம் என்று அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால், ஷோபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். அதற்கு முதலமைச்சரின் கருத்தை பெற்றே, செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்புக் கோரினால் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்ததாக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் கூறினார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய இணை அமைச்சர் ஷோபா சார்பில் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரின் வழக்கறிஞர் ஆர். ஹரிபிரசாத் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழக மக்களைப் பற்றி நான் கூறியதாகக் கூறப்படும் கருத்து உள்நோக்கம் கொண்டதல்ல. தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் கூறிய கருத்துகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரின் உணர்வுகளை புண்படுத்தியிருப்பதை உணர்ந்து, எனது முந்தைய கருத்துகளைத் திரும்பப் பெற்று, சமூக வலைதளங்களில் ஆழ்ந்த மன்னிப்புக் கேட்டேன்.

செழுமையான கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு கொண்ட தமிழக மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனது கருத்துகளால் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக தமிழக மக்களிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீதி வழங்கப்படுவதை கருத்தில் கொண்டு தயவுசெய்து இதனை பதிவு செய்யலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "அமைச்சர் ஷோபா கரந்தலஜே ஏற்கெனவே ஊடகங்கள் முன்பு மன்னிப்பு கேட்டுவிட்டார். அதோடு, நீதிமன்றத்திலும் மன்னிப்பு கோரி பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்" என மத்திய அமைச்சரின் வழக்கறிஞர் ஹரிபிரசாத் வாதிட்டார். அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன், பிரமாணப் பத்திரத்தை பரிசீலித்து தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். அவரது வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரும் மனுவை அடுத்த விசாரணைக்காக வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bengaluru Chennai High Court Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment