கருணாநிதி உடல்நிலை: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சல், ரத்த அழுத்தம் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 27-ம் தேதி நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் நேரில் வந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர். கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தனர். அவர்களுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, "திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வாழ்த்துகள். கருணாநிதி, மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர். தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி" என்று கருணாநிதியை பாராட்டினார்.
இதற்கிடையே, கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அவர் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மதியம் 12.05 மணிக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை, கனிமொழி உட்பட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். நாயுடு, கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நேரில் கேட்டறிந்தார்.
கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்த சந்திரபாபு நாயுடு
மேலும், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், "திமுக தலைவர் கருணாநிதி பற்றி வந்த மீம்ல்களில் நான் ரசித்தது, 'காவேரி மருத்துவமனை ஆரோக்கியமாக உள்ளது...! இப்படிக்கு மு.க. என்பது தான்' என தெரிவித்தார்.
அதேபோல், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்த பிறகு, 'ஆளுமை என்ற வார்த்தைக்கு சிறந்த உதாரணம் திமுக தலைவர் கருணாநிதி தான்' என்று செய்தியாளர்களிடம் பேசினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த சமீபத்திய செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்