ஓகி புயல் சேத மதிப்புகளை கணக்கிட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய குழு வர இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை கடந்த 30-ம் தேதி தாக்கிய ஓகி புயல், பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. மாவட்டம் முழுவதும் ஏராளமான வாழைகள், ரப்பர் மரங்கள் முறிந்தன. ஏராளமான வீடுகள் புயலில் சேதமடைந்தன. கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.
கன்னியாகுமரி மீனவர்களில் பலர் மீட்கப்பட்டபோதும், இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீட்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தினம்தோறும் கன்னியாகுமரி மாவட்ட கடலோரங்களில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்றும்கூட (டிசம்பர் 10) கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் மனித சங்கிலி நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என ஏற்கனவே முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’டும் கேட்கப்பட்டிருக்கிறது. இது குறித்து நேற்று (9-ம் தேதி) மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க தம்பிதுரை வற்புறுத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய தம்பிதுரை, ‘கன்னியாகுமரியில் நிகழ்ந்திருப்பது பேரிடர் என்பதை மத்திய அமைச்சரும் ஒப்புக்கொண்டார். விரைவில் மத்தியக் குழு தமிழகத்திற்கு வரும். கன்னியாகுமரியில் ஏற்பட்ட சேதங்களை அந்தக் குழு ஆய்வு செய்யும்’ என்றார் தம்பிதுரை.
மத்திய குழுவின் அறிக்கை அடிப்படையிலேயே பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிப்பதா? எவ்வளவு நிவாரணத் தொகையை கன்னியாகுமரிக்கு ஒதுக்குவது? என்பவை குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.