கஜ புயல் பாதித்த பகுதிகளில் 3-வது நாளாக மத்தியக் குழுவினர் இன்று (நவம்பர் 26) ஆய்வு நடத்துகிறார்கள். புதுவையில் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அவர்களது ஆய்வு நடக்கிறது. புதுவை முதல்வர் நாராயணசாமியை அவர்கள் சந்திப்பார்கள் எனத் தெரிகிறது.
ஆய்வை முடித்துக் கொண்டு சென்னைக்கு வரும் மத்தியக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சீனியர் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை சந்தித்து உரையாடுவார்கள். அதன் பிறகு டெல்லி சென்று மத்திய அரசிடம் இந்தக் குழு அறிக்கை அளிக்கும்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து பேசினர். அப்போது அப்பகுதி மக்கள், ‘எங்கள் பகுதியில் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் அதிக அளவில் சேதமாகி உள்ளன.
இதனால் மல்லிப்பட்டினம், வேதுபாவச்சத்திரம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள மீனர்வர்களின் 246 விசைப்படகுகளும், 832 நாட்டுப்படகுகளும், 47 கட்டுமரங்களும், ஆயிரத்து 428 வலைகள், ஆயிரத்து 440 மோட்டார் என்ஜின்கள் என பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ.72 கோடியே 44 லட்சத்து 50 ஆயிரம் வரை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். மேலும் சேதமடைந்த படகுகளுக்கு பதில் புதிய படகுகள் அரசுதர வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு படிப்பு செலவுகளை அரசே ஏற்க வேண்டும்’ என்றனர்.
பின்னர் இது குறித்து மத்தியக் குழுவின் தலைவரும் உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளருமான (நீதி) டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறியதாவது: ‘புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள இடங்களை ஆய்வு செய்தோம். பார்வையிட்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூடுதல் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். புயல் சேதம் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கையை சமர்பிப்போம்.’ என்று கூறினார்.