தமிழகத்தில் புதிதாக 11 நர்சிங் கல்லூரிகள் திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து இந்த கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு,100 இளங்கலை நர்சிங் இடங்கள் வழங்கப்படுகின்றன என்று கூறினார்.
மாநிலத்தில் 6 அரசு நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இது மாநிலத்திற்கு போதுமானதாக இல்லை. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் தலா ஒரு நர்சிங் கல்லூரி என வீதம் குறைந்தது 30 புதிய கல்லூரிகளை தொடங்க மத்திய அரசிடம் மாநிலம் அரசு கோரிக்கை வைத்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் புதிதாக 157 செவிலியர் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 27 கல்லூரிகள், ராஜஸ்தானில் 23 கல்லூரிகள், மத்தியப் பிரதேசத்தில் 14, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 11 கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதன் மூலம் கூடுதலாக 1,100 செவிலியர் படிப்புகளுக்கு இடம் கிடைக்கும் என்று கூறினார்.
இந்திய செவிலியர்களின் சேவை பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு தேவை அதிகரித்துள்ளது. புதிய கல்லூரிகள் மூலம் இந்திய மற்றும் உலக அளவில் சேவை செய்வற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நர்ஸிங் கல்லூரிகளின் அமைவிடம் தொடர்பாக பேசிய மா. சுப்பிரமணியன், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் கலந்தாலோசித்து இடங்கள் தேர்வு செய்யப்படும்” என்றார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“