/indian-express-tamil/media/media_files/2025/06/16/rL0eV6gsqiqHc6OKhRQ0.jpg)
வேலூரில் ரூ.498 கோடியில் 4 வழிச் சாலை: போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு
வேலூர் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ரூ.498 கோடி மதிப்பிலான புதிய நான்கு வழி புறவழிச்சாலை திட்டத்திற்கான டெண்டர்களை கோரியுள்ளது. இந்த 20.492 கிலோமீட்டர் நீளமுள்ள புறவழிச்சாலை, NH-75 மற்றும் NH-38 தேசிய நெடுஞ்சாலைகளை மாநில நெடுஞ்சாலை-240 வழியாக இணைக்கும்.
இத்திட்டத்தின்படி, புதிய 4 வழிச்சாலை NH-75ல் உள்ள வந்தரந்தாங்கலில் தொடங்கும். NH-75 வேலூரை கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருவுடன் இணைக்கிறது. புறவழிச்சாலை NH-38-ல் உள்ள சாத்துமதுரையில் முடிவடையும். NH-38 வேலூர்-திருவண்ணாமலை-விழுப்புரம் சாலை வழியாகத் தூத்துக்குடியை இணைக்கிறது.
இந்த புறவழிச்சாலை திட்டம் நிறைவடைந்ததும், வேலூர் நகரப் பகுதியின் நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விழுப்புரம், கலசபாக்கம் மற்றும் ஆரணி போன்ற பகுதிகளில் இருந்து பெங்களூரு, சித்தூர் மற்றும் குடியாத்தம் போன்ற இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் வேலூர் நகரத்திற்குள் நுழையாமல் நேரடியாக செல்ல முடியும். மண்டல அளவிலான இணைப்பை மேம்படுத்துவதோடு, பயண நேரத்தையும் கணிசமாகக் குறைக்கும்.
டெண்டர் ஆவணங்களின்படி, ரூ.498.14 கோடி மதிப்பீட்டில், பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC) மாதிரியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் வடிகால்களுக்காக 6 culverts, ஒரு சாலைச் சந்திப்பும் (at-grade junction) இடம்பெறும். முக்கிய போக்குவரத்துப் பாதை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க ஏற்றவாறு வடிவமைக்கப்படும். இருபுறமும் அமைக்கப்படும் சேவைச் சாலைகள் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க ஏதுவாக இருக்கும்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், வேலூர் புறவழிச்சாலை அமைப்பதற்காக ரூ.752.94 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.இந்த புதிய 4 வழி புறவழிச் சாலை NH-75 மற்றும் NH-38 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் என்றும், வேலூர் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்
அமைச்சர் தெரிவித்தபடி, இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது, வழக்கமான 30 மீட்டருக்குப் பதிலாக 50 மீட்டர் உரிமை வழி (Right-of-Way - RoW) கையகப்படுத்தப்படும். இந்த கூடுதல் அகலம், எதிர்காலத்தில் இந்த சாலையை ஆறு வழிச்சாலையாகவும், 2 வழி சேவைச் சாலைகளுடனும் விரிவாக்கம் செய்வதற்கு வசதியாக இருக்கும். எதிர்கால போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முக்கிய முடிவு ஆகும்.
கூடுதல் அம்சங்களாக, இத்திட்டத்தில் சூரிய சக்தியில் இயங்கும் தெருவிளக்குகள், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் (truck lay-bys), பேருந்து நிறுத்தங்கள், சாலை அடையாளப் பலகைகள் (signage), நடைபாதைகள், சாலை பாதுகாப்பு உள்கட்டமைப்பு போன்றவையும் அமைக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.