scorecardresearch

அண்ணாமலை வைத்த கோரிக்கை; டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் டெண்டர் ரத்து ஏன்? மத்திய அமைச்சர் ஜோஷி விளக்கம்

நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிக்கு விலக்கு அளிப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ள நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

Annamalai- Minister Pralhad Joshi
Annamalai- Minister Pralhad Joshi

நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிக்கு விலக்கு அளிப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ள நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இது ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளை விலக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். மேலும், டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்குப் பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நானும் டெல்டாகாரன் தான். எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு இதற்கு அனுமதி அளிக்காது.” என்று கூறினார்.

மேலும், நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஜோஷி விளக்கம்

இது தொடர்பாக பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 6-ம் தேதி வெளியிட்டுள்ள பதிவில் , “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்னை பெங்களூருவில் அவசர அவசரமாக சந்தித்தார். காவிரி டெல்டாவின் 3 சுரங்கங்களுக்கான ஏலத்தை ரத்து செய்யுமாறு கோரினார். கூட்டாட்சி தத்துவத்தின் மாண்பைக் காக்கவும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து அந்த குறிப்பிட்ட 3 சுரங்கங்களை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார். இந்த ட்வீட்டில் முதல்வர் ஸ்டாலினையும் அமைச்சர் டேக் செய்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் நமது பிரதமர் நரேந்திர மோடி. தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக பாஜக சார்பாக அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த 3 நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Centre rollbacks notification on coal mine auction in delta region