நிலக்கரி பற்றாக்குறைக்கு மத்தியில், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும் (TANGEDCO)மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டாங்கெட்கோ கீழ் இயங்கும் 4,320 மெகாவாட் அனல் மின் நிலையங்களுக்கு அக்டோபர் மாதத்திற்குள் 21.9 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தற்போது, இரண்டு நிறுவனங்களுக்கு 4.8 லட்சம் டன் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் உள்ளது. அதற்கான, முதல் டெலிவரி மே 15ஆம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது.
மத்திய மின் அமைச்சகம் ஏப்ரல் 28 அன்று அனைத்து மாநில அரசுகளுக்கும் எழுதிய கடிதத்தில், அதிகரித்து வரும் மின்சார தேவையை கருத்தில் கொண்டு, அரசு நடத்தும் மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் IPP களுக்கு சொந்தமான அனல் மின் நிலையங்கள் (சுயாதீன மின் உற்பத்தியாளர்கள்) நிலக்கரியை கலப்பதற்காக இறக்குமதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை கலப்பதற்காக, மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் தேவைப்படும் இடங்களில், IPP களுக்கு சரியான நேரத்தில் அனுமதி வழங்குமாறு மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாங்கெட்கோ உட்பட அரசு நடத்தும் மின் உற்பத்தி நிறுவனங்கள் 22.1 மில்லியன் டன்களையும், ஐபிபிகள் 15.9 மில்லியன் டன்களையும் இறக்குமதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் துணைச் செயலாளர் எஸ் மஜும்தார் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது, பருவமழை தொடங்குவதற்கு முன், மின் உற்பத்தி நிலையங்களில் தேவையான குறைந்தபட்ச நிலக்கரி இருப்புக்களை உறுதி செய்ய வேண்டும். மே 31-க்குள் நிலக்கரியை கலக்கும் நோக்கத்திற்காக இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வது அவசியம். அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும், ஜூன் 30க்குள் ஒதுக்கப்பட்ட அளவில் 50 சதவீதத்தையும், ஆகஸ்ட் 31க்குள் 40 சதவீதத்தையும், ஆக்டோபர் 31க்குள் மீதமிருக்கும் 10 சதவீதத்தையும் டெலிவரி செய்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலக்கரியை இறக்குமதி செய்ய டாங்கெட்கோ நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி பிரபல நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil