சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கால அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.1) நேரில் ஆய்வு செய்தார்.
ஃபீஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்தும் மழை பாதித்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. சுரங்கப் பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது.எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் உள்ளது.
அம்மா உணவகங்கள் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளை வேகப்படுத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. மிட்பு பணிகளை துரிதப்படுத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் 3 அமைச்சர்கள் அங்கே விரைந்துள்ளனர்.
தமிழக புயல் பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு தமிழகம் வர வேண்டும். மழை பாதித்த மாவட்டங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பேசி முடிவெடுக்கப்படும். தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நானே சென்று பார்வையிடுவேன். விழுப்புரம், கடலூர் மாவட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்" என முதல்வர் ஸ்டாலின் கூறினார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“