பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் போராடி முயன்று ஐ.ஐ.டி படிப்பை முடித்த மாணவனுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் பிரணவ் நாயர்(22). பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட பிரணவ் சக்கர நாற்காலியின் உதவியுடன் தான் நகரவே முடியும். ஆனாலும், இவருக்கு சிறு வயதில் இருந்தே உயர் கல்வி வரை கற்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், உடல் ரீதியான பிரச்னைகள் இருந்ததால் அவரை சேர்த்துக்கொள்ள அங்குள்ள பள்ளிகள் தயக்கம் காட்டின. அதனால் மஸ்கட் சென்று அங்கு பள்ளிப் படிப்பை முடித்தார்.
அதையடுத்து கம்ப்யூட்டர் கல்வியில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டதால் மென்பொருள் பொறியாளராக விரும்பினார். அவரது ஆசை நிறைவேறும் விதமாக கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி-யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை பயன்படுத்தி அங்கு சேர்ந்தார். தற்போது ஐஐடி இறுதியாண்டு படித்து வரும் பிரணவ் நாயர் கூகுள் நிறுவனம் நடத்திய வளாக நேர்முக தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
அதையடுத்து, ஜூலை மாதம் பெங்களூருவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் அவர் வேலைக்கு சேர உள்ளார். அவரது பெற்றோர் மற்றும் நிறுவனத்தில் உள்ள ஆசிரியர்களின் ஆதரவுடன், பல்வேறு தடைகளைத் தாண்டி தனது லட்சியத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளது உடல் ரீதியான தடைகள் உள்ளவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“