சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் உத்தர பிரதேசத்திற்கு தப்பிச் செல்ல இருந்த நிலையில், அவர்களை விமானத்தில் வைத்தே போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக இன்று காலை சென்னையில் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியது. குறிப்பாக, திருவான்மியூர், பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி என அடுத்தடுத்து இச்சம்பவம் நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிகுள்ளாகினர். இதில் சுமார் 20 சவரனுக்கும் மேற்பட்ட நகைகள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இடங்களில் பதிவான அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் சென்னை விமான நிலையத்திற்கு சென்றதை போலீசார் கண்டறிந்தனர். அதன்பேரில், விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் செயின் பறிப்பில் ஈடுபட்டு விமானம் வாயிலாக உத்தர பிரதேசத்திற்கு தப்பிச் செல்ல இருந்த சூரஜ் மற்றும் ஜாஃபர் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இவர்கள் இருவரிடமும் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக பொங்கல் பண்டிகை அன்று தாம்பரம் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது. அந்த சம்பவத்திற்கும், இன்று கைது செய்யப்பட்ட இருவருக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று மணி நேரத்தில் உத்தர பிரதேசத்திற்கு விமானம் மூலம் தப்பிச் செல்லும் பாணியை இவர்கள் கையாண்டு வருவதாக தெரிய வருகிறது.
செயின் பறிப்பில் இவர்களுக்கு வேறு யாரெனும் உதவி செய்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்று காலை கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வாகனத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். அதன்பேரில், சம்பந்தப்பட்ட வாகனம் யாருடையது என்றும் ஆராயப்பட்டு வருகிறது.