கோவை மற்றும் ஈரோடு பகுதியில் செயின் திருட்டு, மொபைல்போன் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் கைதான இளைஞர்கள், மெட்ரோ படத்தின் தூண்டுதலாலேயே இந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோவை கருமத்தம்பட்டி பகுதியில், போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகரம்பாளையத்தை சேர்ந்த ஷரண் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இவன் மேல், செயின் திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவன் அளித்த தகவலின் பேரில், வாகரம்பாளையத்தை சேர்ந்த கமலகண்ணன், சந்தோஷ் குமார், கோபாலகிருஷ்ணன் மற்றும் தேனியை சேர்ந்த பாண்டீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்தில் வெளியான மெட்ரோ படத்தை பார்த்து, தாங்கள் இந்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அவர்கள் தெரிவித்தனர். இதுவரை கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட செயின் திருட்டு சம்பவங்களை செய்துள்ளதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஜெயலலிதா தொடர்பான இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
இவர்கள் வாட்சப்பின் மூலம், செயின் பறிப்பு, மொபைல் போன் பறிப்பு, வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட விபரங்களை பகிர்ந்துகொண்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போன்களில், மெட்ரோ படத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் இருந்தன.
செயின் திருட்டு, மொபைல் போன் திருட்டு, வாகன திருட்டு உள்ளிட்டவைகளில் இருந்து கிடைக்கும் பணத்தை கொண்டு தங்கள் பெண் நண்பர்களிடம் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பணக்கார மற்றும் சொகுசான வாழ்க்கை வாழ இந்த செயல்களில் ஈடுபட்டு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய இளைய தலைமுறையினர், சினிமா பார்த்து காதலிக்க கற்றுக்கொண்டனர். தற்போது திருடவும் கற்றுக்கொண்டுள்ளனர். திரைத்துறையினர், நாட்டுக்கு நல்லது செய்யும் வகையிலான கருத்துக்களை கொண்ட படங்களை எடுக்க முன்வர வேண்டும். இளைஞர்கள் சினிமாவில் காட்டும் ஆடம்பர வாழ்க்கையை நிஜத்தில் வாழ நினைப்பதாலேயே இத்தகைய குரூர எண்ணங்கள் தோன்றுவதாக போலீஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.