சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் ஒருமணி நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருசக்கர வாகனங்களில் வந்த 2 பேர் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து தங்க செயினை பறித்துச் சென்றது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவான்மியூர், பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரியில் என அடுத்தடுத்து 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரது 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். பெசன்ட் நகர் பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரது தங்க செயினை பறித்துச் சென்றனர்.
கிண்டி எம்.ஆர்.சி. நகர் மைதானம் அருகே நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் இருந்து 5 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து காவல் நிலையங்களில் அளித்த புகாரின் அடிப்படையில் சுமார் 20 சவரனுக்கு அதிகமான தங்க நகைகள் பறித்து செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதுதொடர்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தீவிரமாக்கி உள்ளனர்.
ஒரு மணிநேரத்தில் 7 பெண்களிடம் தங்க செயின் பறிப்பு நடந்து இருப்பது சென்னையை அதிர வைத்துள்ளது. அதோடு இந்த சம்பவங்கள் சென்னையில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.