கோவை பீளமேட்டில் உள்ள ஹட்கோ காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கெளசல்யா(38). இவர்கள் தினமும் காலை நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தனியாக நடைபயிற்சி மேற்கொண்டார். ஜி.வி.ரெசிடென்சி குடியிருப்பில் சென்றபோது அவ்வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் கெளசல்யாவின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றனர். அப்போது அவர் தனது நகையை கையால் கெட்டியாக பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். அச்சமடைந்த மர்ம நபர்கள் நகையை விட்டுவிட்டு தப்பினர். மர்ம நபர்கள் நகையை பறிக்க முயன்றதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கெளசல்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீஸார் விசாரித்தனர். இதற்கிடையே, கெளசல்யாவிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. தனிப்படை போலீஸார் அந்த கார் மாநகரை விட்டு வெளியே சென்றுவிட்டதா என்பதை உறுதிப்படுத்த சோதனைச் சாவடிகளில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் அந்த கார் பதிவாகவில்லை. இதையடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள், கார் ஆகியவை சிங்காநல்லூருக்குள் இருப்பதை போலீஸார் உறுதிபடுத்தினர்.

இதில் நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் (25), அவரது நண்பரான தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் (29) எனத் தெரிந்தது. கோவை விமான நிலைய சாலையில் சுற்றிய இருவரையும் நேற்று போலீஸார் கைது செய்தனர்.இதுதொடர்பாக துணை ஆணையர்கள் சண்முகம் – சந்தீஷ் ஆகியோர் கூறியதாவது
‘‘அபிஷேக் மீது முன்னரே நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. அபிஷேக் கோவையில் தங்கியிருந்து உணவு பார்சல் விநியோகிக்கும் நிறுவனத்தில் ஊழியராகவும்
சக்திவேல் வாடகை கார் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.சக்திவேலுக்கு பணம் தேவைப்பட்டதால் இருவரும் சேர்ந்து நகை பறிக்க முடிவு செய்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.மேலும் சக்திவேல் காரை ஓட்ட அபிஷேக் நகையைப் பறிக்க முயன்றுள்ளார். இந்த காரில் நம்பர் பிளேட் இல்லை. காரில் இருந்த ஸ்டிக்கர் அடிப்படையில் அவர்களை பிடித்தோம்’ என்றனர்.
இருவரது கை முறிந்தது: அபிஷேக், சக்திவேலை பிடிக்க போலீஸ் துரத்தியபோது விமான நிலையம் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி அருகே விரட்டிச் சென்றபோது, ஒரு கட்டத்தில் காரை நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கி இருவரும் தப்பி ஓடினர்.

அப்போது தவறி கீழே விழுந்ததில் அபிஷேக்குக்கு இடது கையும் – சக்திவேலுக்கு வலது கையும் முறிந்தன. இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர்.இதனை அடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே சில குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்ததை தொடர்ந்து
பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடல் பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை