சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கைதான ரவுடி ஜாஃபர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் ஒரே நாளில் தொடர்ந்து 7 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் விமானத்தில் தப்ப முயன்றபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாஃபர், சூரஜ் ஆகியோர் கைதாகினர்.
கொள்ளையடித்த நகையை பறிமுதல் செய்ய சென்றபோது கைதானவர்கள் தப்ப முயன்றதால் காவல் ஆய்வாளர் முகமது புகாரி துப்பாக்கியால் சுட்டனர்.
திருடப்பட்ட நகையை பறிமுதல் செய்ய தரமணி ரயில் நிலையம் அருகே ஜாஃபரை அழைத்துச் சென்றபோது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜாஃபர் சுட்டதாக காவல் துறை தகவல் தெரிவித்தனர்.
தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் புகாரி சுட்ட நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஜாஃபர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கொள்ளையன் ஜாஃபரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
விசாரணையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ஜாஃபர் மீது பல்வேறு மாநிலங்களிலும் செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தை ஜாஃபர் ஓட்டியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் பிடிபட்ட நிலையில் இதில் மூளையாக செயல்பட்ட ஜாஃபர் குலாம் ஹூசைன் தப்பி ஓடும் முயற்சியில் போலீசார் என்கவுண்டரில் சுட்டது குறிப்பிடத்தக்கது.