சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை நாட்டியக் கல்லூரியில் ஆசிரியர் மீது பாலியல் புகார்கள் எழுந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா மாணவிகளிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினார்.
சென்னை திருவான்மியூரில் புகழ்பெற்ற கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக அக்கல்லூரியின் முன்னாள் இயக்குநர், சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
கலாஷேத்ராவில் ஆசிரியர் மீது பாலியல் புகார் குறித்து, விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்குமாறு தமிழக டி.ஜி.பி-க்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, இந்த புகார் குறித்து விசாரணை நடத்து மாறு சென்னை காவல் ஆணையருக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
இந்நிலையில், கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் ஆசிரியர் மீது எழுந்துள்ள பாலியல் புகார் குறித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த விவகாரத்தில், ஏற்கெனவே டி.ஜி.பி உத்தரவின் பேரில் அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"