/tamil-ie/media/media_files/uploads/2021/10/durai-vaiko-2.jpg)
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகிகளின் பேராதரவோடு மதிமுக தலைமைக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அவர் இந்த வாரம் பொறுப்பேற்க உள்ளார். இதனால், மதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் துரை வைகோ கட்சியை பழையபடி வலுவான நிலைக்கு கொண்டு செல்வார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ 1994ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை (மதிமுக) தொடங்கினார். அப்போது, அவர் திமுகவில் வாரிசு அரசியலை எதிராகவும் குரல் கொடுத்தார்.
மதிமுக தனது அரசியல் பயணத்தை வெற்றிகரமாகவே தொடங்கியது. இதுவரை மதிமுக சார்பில், 11 மக்களவை எம்.பி.க்கள் 1 ராஜ்ய சபா எம்.பி என பதவி வகித்துள்ளனர். ஆனால், கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதிமுகவின் துணை செயலாளர் கணேசமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வைகோ திமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த அளவுக்கு மதிமுக அதன் செல்வாக்கில் சரிவைச் சந்தித்துள்ளது.
இந்த சூழ்நிலையில்தான், மதிமுக பொதுச் செயலாளரும் ராஜ்ய சபா எம்.பி.யுமான வைகோவின் மகன் துரை வைகோ கடந்த வாரம் மதிமுகவின் தலைமைக் கழக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துரை வைகோவின் அரசியல் நுழைவு பலராலும் விமர்சிக்கப்பட்டது. வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ தலைமையிலான மதிமுகவில் அவருடைய மகன் தலைமைப் பதவிக்கு வருகிறார் என்று மதிமுகவிலும் வாரிசு அரசியல் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், வைகோ இது வரசியல் அல்ல. வரலாற்றின் தேவை. தேர்தல் நடத்தப்பட்டுதான் அவருக்கு அந்த பொறுப்பு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், துரை வைகோவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவுத்து மதிமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் மதிமுகவில் இருந்து வெளியேறினார்.
தமிழக அரசியலில் ஒருவான கட்சியாக தனது பயணத்தை தொடங்கிய மதிமுகவின் தற்போதைய குறித்து மதிமுக நிர்வாகிகள் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் மதிமுகவுக்கு தொண்டர்கள், நிர்வாகிக்ள் இருந்தனர். மதிமுகவில் இருந்த ஏராளமான மாநில அளவிலான தலைவர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கட்சியின் நிலைப்பாட்டை பொதுமக்கள் மத்தியில் பரப்பினார்கள். இப்போது, கட்சியில் சில மாநில அளவிலான தலைவர்களும் குறைவான பேச்சாளர்களும் மட்டுமே உள்ளனர். துரை வைகோவின் முதல் வேலை மதிமுகவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும்.” என்று கூறுகின்றனர்.
இந்தியத் தேர்தல் ஆணையம் மதிமுகவை மீண்டும் அங்கீகரிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து, மற்றொரு மதிமுக மூத்த நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், மதிமுகவின் அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு 6% வாக்கை பெற வேண்டும். இந்த அளவு வாக்கு சதவீதத்தைப் பெற மதிமுக சின்னத்தின் கீழ் குறைந்தது 4 எம்.பி.க்கள் மற்றும் 12 எம்.எல்.ஏ.க்கள்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். குறைந்தது 2 எம்.பி.க்கள் மற்றும் 7 எம்எல்ஏக்களை உருவாக்க வேண்டும். ஆனால், எங்களின் தற்போதைய பலத்தை வைத்து பார்த்தால், எதிர்காலத்தில் இவ்வளவு இடங்களில் போட்டியிடுவது சாத்தியமில்லை” என்று கூறுகிறார்கள்.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணி வென்றது. ஆனால், திமுக கூட்டணியில் இருந்த மதிமுக ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அந்த ஒரு இடத்தில் போட்டியிட்ட மூத்த தலைவர் கணேசமூர்த்தி திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். “இப்போது, அத்தகைய கூட்டணி இருந்தால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும், அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் அதே எண்ணிக்கையிலான இடங்கள் கிடைக்கும்” என்று அவர் கூறினார். எனவே, மதிமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், மதிமுகவினர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றனர். சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக கட்சிகளுக்கும் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால், இக்கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிட்டன. மதிமுகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்க திமுக ஒப்புக்கொண்டால், மற்ற அனைத்துக் கட்சிகளும் அதே அளவு தொகுதிகளை கேட்கின்றன. இதனால், மதிமுக அதிக சீட்களை பெறுவது என்பது சவாலானதாக மாறியது.
இந்த சூழலில்தான், மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராகியுள்ள துரை வைகோ, மதிமுகவை வலுப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். அதே போல, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரதை தக்கவைத்துகொள்ள வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், மதிமுகவின் தலைமை முகமாக அரசியலில் நுழைந்துள்ள துரை வைகோ மாநிலத்தின் எல்லா விவகாரங்களிலும் ஒரு அரசியல்வாதியாக தனது தனித்துவமான கருத்துகளைத் தெரிவித்து கவனம் பெற வேண்டும். “தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு பிரச்சினையிலும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். துரை வைகோவின் கருத்துக்கள் அவரது திறமைகளையும் கட்சியின் கொள்கையுடன் வெளிப்பட வேண்டும்.” என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவைதான், துரை வைகோவின் சவால்களாக உள்ளன.
மதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் ஊடகங்களிடம் கூறுகையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் துரை வைகோ திறமையை வெளிப்படுத்தினார். திருநெல்வேலியில் உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் மதிமுக வெற்றி பெற்று, அக்கட்சிக்கான ஒன்றியத் தலைவர் பதவியையும் கைப்பற்றியுள்ளது என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.