சந்திரபாபு நாயுடு - ஸ்டாலின் சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சி

இதன் தொடர்ச்சியாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்

பாஜகவிற்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்தது. ஆனால், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி பா.ஜ.க. கூட்டணியை விட்டு தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது .

இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

இதை முன்னிட்டு, கடந்த மாதம் 27ம் தேதி டெல்லி சென்ற சந்திரபாபு நாயுடு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியை சந்தித்து பேசினார்.

பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

நவம்பர்.1ம் தேதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்த சந்திரபாபு நாயுடு கூட்டணியை உறுதி செய்தார். காங்கிரசும் – தெலுங்கு தேசமும் பரம எதிரிகளாக ஆந்திராவில் கருதப்பட்ட நிலையில், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைத்தையும் கைவிட்டு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார் சந்திரபாபு நாயுடு.

நேற்று கர்நாடகா சென்ற சந்திரபாபு அம்மாநில முதல்வர் குமாரசாமி மற்றும் அவரது தந்தை தேவகவுடாவை சந்தித்துப் பேசினார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக சந்திரபாபு நாயுடு சென்னை வந்துள்ளார். ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வைத்து சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் உள்ளது. தற்போது, காங்கிரஸ் கட்சி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால், ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close