கோவையில் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ கிளினிக்: கிராம மக்கள் மகிழ்ச்சி
கோவையில் கிராமப்புற மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஈச்சனாரி பிரிவு பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச ஆரம்பநிலை சிகிச்சையகம் தொடங்கப்பட்டுள்ளது.
கோவையை மையமாக கொண்டு சந்திரன்ஸ் யுவா என்ற அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு சமூக சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கிராமப்புற மற்றும் ஏழை மக்கள் பயன்பெறகூடிய வகையில் கோவை ஈச்சனாரி பிரிவு பகுதியில் இலவச ஆரம்பநிலை சிகிச்சையகம் தொடங்கப்பட்டுள்ளது.
Advertisment
கிளினிக் பற்றி ஒருங்கிணைப்பாளர் சசிகலா கூறுகையில், "சிறியவர், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும். அனைத்து நாட்களும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நல்ல தகுதியுடைய மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். இங்கு வரும் நோயாளிக்கு தொடர்ந்து மருத்துவ உதவி தேவைப்படும் என்றால் கோவை மாநகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியாக அறக்கட்டளை சார்பில் பரிந்துரை செய்யப்படும" என்றார்.
தொடர்ந்து, "இதுபோன்று மருத்துவ உதவிகள் கிடைக்காமல் இருக்கும் பகுதிகளை கண்டறிந்து இலவச கிளினிக் அமைக்க திட்டமிட்டு வருகிறோம். உணவு, உடை, உறைவிடம், கல்வி, சுற்றுச்சூழல், ஆரோக்கியம், திறன் மேம்பாடு ஆகிய 7 பிரிவுகளில் மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். தற்போது வரை 1,428 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி அவர்களை பல்வேறு பணிகளிலும், சொந்தமாக தொழில் தொடங்கவும் அறக்கட்டளை மூலம் உதவி செய்துள்ளோம். எளிய மக்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்ட யாராயினும் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம்" என்றார்.
Advertisment
Advertisement
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“