இந்தியாவின் சந்திரயான்- 3 விண்கலம் இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான்- 3 விண்கலம் அனுப்பபட்டுள்ளது. இந்தியா மட்டும் அல்ல உலக நாடுகளும் இஸ்ரோவின் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சந்திரயான்- 3 விண்கலம் நன்றாக செயல்பட்டு வருகிறது என்றும் திட்டமிட்டபடி இன்று தரையிறக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த வரலாற்று நிகழ்வை காண மாணவர்களும், பொதுமக்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையொட்டி சென்னையில் இந்த நிகழ்வை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்திரயான்- 3-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்ப சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்திலும் இந்நிகழ்வை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் பொதுமக்கள், மாணவர்கள் பெரிய திரையில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“