/indian-express-tamil/media/media_files/2025/07/14/tvk-protest-issue-2025-07-14-22-24-42.jpg)
Today Latest Live News Update in Tamil 14 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 14, 2025 22:30 IST
போராட்டம் நடத்திய த.வெ.க-வினர் மீது வழக்குப் பதிவு
சென்னை, சிவானாந்தா சாலையில் த.வெ.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அங்கிருந்த சாலை தடுப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை தொடர்ந்து, பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக த.வெ.க-வினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
Jul 14, 2025 21:23 IST
சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை
சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது. திடீர் மழையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
-
Jul 14, 2025 20:52 IST
கூடுதல் தொகைக்கு மதுபானம் விற்பனை - டாஸ்மாக் அதிரடி நடவடிக்கை
2024-25 ஆம் ஆண்டில் கூடுதல் தொகைக்கு மதுபானம் விற்பனை செய்த ஊழியர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 451 டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 2000-க்கு பதிலாக ரூ. 1000 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
Jul 14, 2025 20:38 IST
ஜம்மு காஷ்மீர் முதல்வரை வீட்டுக் காவலில் வைத்ததாக புகார்; ஸ்டாலின் கண்டனம்
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவை வீட்டுக் காவலில் வைத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்படி, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்க வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் அவர் சுவர் ஏறி குதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை பா.ஜ.க அரசு மாநில உரிமைகளை பறித்து வருகிறது. எந்த மக்கள் பிரநிதிக்கும் இது நடக்கலாம்" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
Jul 14, 2025 20:17 IST
காப்புரிமை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இளையராஜா மனு
பாடல்கள் காப்புரிமை தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை, சென்னைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் இளையராஜா மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஒரே தன்மை கொண்ட வழக்குகள் இரு நீதிமன்றங்களில் நடப்பது முரண்பாடான தீர்ப்புக்கு வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jul 14, 2025 20:00 IST
தமிழக காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கரூர், நாமக்கல், தேனி, ராணிபேட்டை, அரியலூர், வேலூர், சிவகங்கை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட எஸ்.பி-க்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Jul 14, 2025 19:45 IST
திருப்பதியில் ஈஷார் விரைவு ரயிலில் தீ விபத்து
திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஷார் விரைவு ரயில் பெட்டியில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.
-
Jul 14, 2025 19:31 IST
த.வெ.க முதலில் தொண்டர்களை உருவாக்க வேண்டும்; ரசிகர்களை அல்ல - வன்னி அரசு
சென்னையில் நடைபெற்ற த.வெ.க ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு, வி.சி.க துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு குற்றம் சாட்டியுள்ளார். அதன்படி, "ரசிக மனநிலையில் கும்பலை கூட்டினால் சேதாரத்தை உருவாக்குவார்கள். த.வெ.க முதலில் தொண்டர்களை உருவாக்க வேண்டும்; ரசிகர்களை அல்ல" என்று அவர் விமர்சித்துள்ளார்.
-
Jul 14, 2025 19:17 IST
நாளை காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும் - என். ஆனந்த் வலியுறுத்தல்
நாளை (ஜூலை 15) முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என, த.வெ.க பொதுச் செயலாளர் என். ஆனந்த், அக்கட்சி தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
-
Jul 14, 2025 18:34 IST
பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு
வேட்டுவம் பட ஷூட்டிங்கின்போது சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் விபத்தில் உயிரிழந்தார். இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகியோர் மீது நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Jul 14, 2025 18:28 IST
ஓடும் ரயிலிலிருந்து கர்ப்பிணியை தள்ளியவருக்கு சாகும் வரை சிறை
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லைக்கு தந்து ரயிலிலிருந்து தள்ளிவிட்ட வழக்கில் கைதான ஹேமராஜுக்கு சாகும் வரை சிறை; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு, ரயில்வே இணைந்து ரூ. 1 கோடி வழங்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jul 14, 2025 17:41 IST
கன்னடத்து பைங்கிளியின் கண்கள் தானம் !
மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம் செய்யப்படுகின்றன. இதற்காக கண் மருத்துவமனை மருத்துவர்கள் சரோஜா தேவியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
-
Jul 14, 2025 17:15 IST
ஜப்பானில் தமிழ்நாடு தொழில்வழிகாட்டி நிறுவன அமர்வு - தொடங்கி வைத்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
ஜப்பானில் தமிழ்நாடு தொழில்வழிகாட்டி நிறுவன அமர்வை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தொழில்துறையின் கீழ் தொழில் வழிகாட்டி நிறுவனம் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் முதலீடு செய்ய, விரிவாக்கம் செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதியை பெற்றுத்தருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, தென்கொரியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் தொழில் துவங்க வழிகாட்டுதல், சேவை வழங்கும் வகையில் அந்நாடுகளில் ‘கைடன்ஸ் டெஸ்க்’ அமர்வு தொடங்கப்பட்டுள்ளது. தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் ஜப்பான் அமர்வை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தொடங்கி வைத்தார்.
-
Jul 14, 2025 17:13 IST
பூமியை நோக்கி புறப்பட்டது டிராகன் விண்கலம்
சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோருடன் பூமியை நோக்கி டிராகன் விண்கலம் புறப்பட்டது. சிறிய தாமதத்துக்கு பிறகு விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் பிரிந்தது.
-
Jul 14, 2025 17:07 IST
ஆர்ப்பாட்டத்தில் சேதமடைந்த சென்டர் மீடியன்கள் சரி செய்து தருகிறோம் - மாநகராட்சிக்கு த.வெ.க கடிதம்
நேற்று சிவானந்தா சாலையில் நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்டத்தில் சேதமடைந்த சென்டர் மீடியன்களை சரி செய்து தருகிறோம், உரிய அனுமதி கொடுங்கள் என மாநகராட்சிக்கு தவெக கடிதம் எழுதியுள்ளது.
-
Jul 14, 2025 16:52 IST
ரயில் தீ விபத்து - தண்டவாள விரிசலே காரணம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
"திருவள்ளூரில் டேங்கர் ரயில் தீ விபத்திற்கு தண்டவாள விரிசலே காரணம். நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஏற்பட்ட டேங்கர் ரயில் தீ விபத்தில் 15 பெட்டிகள் முழுவதுமாக எரிந்து போயின, எரியாமல் தப்பிய 2 பெட்டிகளில் இருந்த டீசல் மீட்க்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள க்ரூட் ஆயில் எரிந்து முழுவதுமாக வீணானது" என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
-
Jul 14, 2025 16:51 IST
ரயில் தீ விபத்து - உயர்மட்ட குழு விசாரணை
திருவள்ளூர் டீசல் டேங்கர் ரயில் தீ விபத்து தொடர்பாக லோகோ பைலட்டின் ரத்த மாதிரியை சேகரித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பணிக்கு வருவதற்கு முன்பாக லோகோ பைலட் மது அருந்தினாரா? என்கிற கோணத்தில் திருவள்ளூர் ரயில் நிலைய அதிகாரிகளிடம் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Jul 14, 2025 16:47 IST
தமிழ்நாட்டில் 8 இடங்களில் புதிதாக சிறிய துறைமுகங்கள் - தமிழ்நாடு அரசு திட்டம்
தமிழ்நாட்டில் 8 இடங்களில் புதிதாக சிறிய துறைமுகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. செங்கல்பட்டு(முகையூர், பனையூர்), விழுப்புரம் (மரக்காணம்), கடலூர்(சிலம்பிமங்கலம்) துறைமுகம் அமைக்க திட்டம். மயிலாடுதுறை (வானகிரி), நாகை (விழுந்தமாவடி), தூத்துக்குடி (மனப்பாடு), குமரி கடற்கரை பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. துறைமுகங்களை உருவாக்க தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் தெரிவிக்கும் முதலீட்டாளர்களுக்கு தொழில் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு அனுமதிகள் வழங்கப்படும். 30 வருடம் முதல் 99 வருடம் வரை நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
Jul 14, 2025 16:29 IST
திருப்பதியில் ரயிலில் தீ விபத்து - ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீ அணைப்பு
திருப்பதி ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு நிறுத்தப்பட்ட ரயில்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, இது பயணிகள் மற்றும் ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஹிசாரிலிருந்து திருப்பதி செல்லும் சிறப்பு ரயிலில் (04717) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்த ராயலசீமா எக்ஸ்பிரஸ் மற்றும் ஷீரடி எக்ஸ்பிரஸின் பெட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகாலையில் இரண்டு பெட்டிகளில் இருந்து அடர்ந்த புகை மற்றும் தீப்பிழம்புகள் வெடித்ததை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சில நிமிடங்களில், தீ தீவிரமடைந்து, பெட்டிகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாக, சம்பவம் நடந்த நேரத்தில் ரயில்கள் காலியாக இருந்ததால், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசர சேவைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர குழுக்கள் விரைவாக செயல்பட்டன. பல தீயணைப்பு வாகனங்கள் வந்த நிலையில், தீயை முழுவதுமாக அணைக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எடுத்துள்ளது.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. மின்சார ஷார்ட் சர்க்யூட் அல்லது அதிக வெப்பம் காரணமாக இருக்கலாம் என ரயில்வே அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர், ஆனால் முறையான விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெட்டிகளுக்குள் பயணிகள் யாரும் இல்லை என்றாலும், சொத்து இழப்பு கணிசமானது. எரிந்த பெட்டிகள் இப்போது தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்டு வருகின்றன, மேலும் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. -
Jul 14, 2025 15:09 IST
ஆக.3 முதல் பிரேமலதா தேர்தல் சுற்றுப்பயணம்..!!
ஆகஸ்ட். 3 முதல் 28ம் தேதி வரை பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். ஆக.3ல் திருவள்ளூரில் தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை பிரேமலதா தொடங்குகிறார்.
-
Jul 14, 2025 14:52 IST
தேர்தல் வழக்கு: நயினார் நாகேந்திரன் ஆஜர்
தேர்தல் வழக்கில் குறுக்கு விசாரணைக்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆஜரானார். நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ்சின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி நயினார் வழக்கு தொடர்ந்தார். ராபர்ட் புரூஸ் தன் மீதான வழக்கு, சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக நயினார் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
-
Jul 14, 2025 14:31 IST
தெற்கு ரயில்வே மேலாளர் உத்தரவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வரவேற்பு..!!
ரயில்வே கேட் கீப்பருக்கு 8 மணி நேர வேலை உள்ளிட்ட தெற்கு ரயில்வே மேலாளரின் உத்தரவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு தெரிவித்துள்ளார். கடலூரில் ரயில்வே கடவுப்பாதை விபத்தைத் தொடர்ந்து ரயில்வேயின் புதிய உத்தரவுக்கு வரவேற்புக்குரியது. கேட்டுகளைத் திறக்க யாரும் நிர்பந்தித்தார்களா இல்லையா என்பதை அறிய சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். வழக்கம்போல் காலதாமதம் செய்யாமல் 10 நாட்களுக்குள் புதிய உத்தரவைகளை நிறைவேற்றுக என அவர் தெரிவித்துள்ளார்.
-
Jul 14, 2025 14:29 IST
எனக்கு இன்னொரு தாய் சரோஜாதேவி அம்மா: நடிகர் கமல்ஹாசன் உருக்கம்
எனக்கு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜாதேவி அம்மா என நடிகர் கமல்ஹாசன் உருக்கமாக தெரிவித்துள்ளார். என்னைப் பார்க்கும் இடமெல்லாம் கன்னம் கிள்ளி செல்ல மகனே என்று அழைப்பார் சரோஜாதேவி. எத்தனை எத்தனையோ அழகிய நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம் என அவர் தெரிவித்துள்ளார்.
-
Jul 14, 2025 14:09 IST
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்: கர்நாடக அரசு
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் சரோஜாதேவி இல்லத்தில் அவரது உடல் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். சொந்த ஊரான ராம்நகரா மாவட்டம் தஷ்வாரா கிராமத்தில் அரசு மரியாதையுடன் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 14, 2025 13:56 IST
"சேதமடைந்த தடுப்புக்கம்பிகளை சரிசெய்து தருகிறோம்" - சென்னை மாநகராட்சிக்கு த.வெ.க கடிதம்
சென்னை சிவானந்தா சாலையில் நேற்று (13-07-2025) நடைபெற்ற த.வெ.க ஆர்ப்பாட்டத்தின்போது சேதமடைந்த தடுப்புக்கம்பிகளை சரிசெய்து தருவதாக சென்னை மாநகராட்சிக்கு த.வெ.க சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சேதமடைந்த தடுப்புக்கம்பிகளை சரிசெய்து தருவதற்கு அனுமதி கோரி, சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளருக்கு த.வெ.க மாவட்டச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
-
Jul 14, 2025 13:31 IST
த.வெ.க தலைவர் விஜய்க்கு ஓ.பி.எஸ் தார்மீக ஆதரவு
ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில், “கட்சி தொடங்கிய பின் இன்றுவரை விஜய் நன்றாகத்தான் செயல்படுகிறார்; அவருக்கு எங்கள் தார்மீக ஆதரவு உண்டு” என்று கூறியுள்ளார்.
-
Jul 14, 2025 12:59 IST
‘நாம் யார் பின்னாலும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை... ஓ.பி.எஸ் தலைமையில் மாநாடு’ - பண்ருட்டி ராமச்சந்திரன்
அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “நாம் யார் பின்னாலும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை; ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் செப்டம்பர் 4-ஆம் தேதி மாநாடு நடைபெறும்” என்று பேசினார்.
-
Jul 14, 2025 12:55 IST
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் - அமுதா ஐ.ஏ.எஸ் விளக்கம்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தின் கீழ் மக்கள் குறைகளைத் தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டம் குறித்து தமிழக அரசு செய்தித் தொடர்பாளரும், அமுதா IAS அதிகாரியுமான திருமதி. அமுதா ஐ.ஏ.எஸ். அவர்கள் விரிவான விளக்கமளித்துள்ளார்.
முக்கிய அம்சங்கள்:
கூடுதல் மக்கள் பங்கேற்பு: இந்த முகாம்களில் மக்கள் அதிகமாக கூடுகிறார்கள் என்றும், வசிப்பிட இடங்களிலேயே முகாம்கள் நடத்த உள்ளோம் என்றும் அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்தார்.
திட்டமிட்ட ஏற்பாடுகள்: மக்களுக்கு முகாம் நடத்துவது தெரியப்படுத்தப்பட்டதுடன், முகாம் நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலர்களை அனுப்பி சிறப்புத் திட்ட முகாம் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விரைவுத் தீர்வு: 45 நாட்களில் இந்த மனுக்களுக்கான தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் கூறியிருப்பதாகவும், அதனை அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்தார்.
தன்னார்வலர்களின் பங்கு: இத்திட்டத்திற்காக ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நவம்பர் மாதம் வரை 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
-
Jul 14, 2025 12:49 IST
50 ஆண்டுகள் 200 திரைப்படங்கள்: சரோஜா தேவி மறைவுக்கு எல்.முருகன் இரங்கல்
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரக்கல் குறிப்பில், “தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை, ‘பத்மஶ்ரீ’ திருமதி.சரோஜா தேவி அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
ஐம்பதாண்டு காலங்கள் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம், தென்னிந்திய திரை ரசிகர்களின் அபிமானம் பெற்றவர்; ‘கன்னடத்துப் பைங்கிளி’ என்றும், ‘அபிநய சரஸ்வதி’ என்றும் அன்போடு பாராட்டப்பட்டவர். இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்மபூஷன், பத்மஶ்ரீ’ போன்ற விருதுகள் பெற்றுள்ளார்.
இச்சமயத்தில், திருமதி.சரோஜா தேவி அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி..!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை, ‘பத்மஶ்ரீ’ திருமதி.சரோஜா தேவி அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
— Dr.L.Murugan (@DrLMurugan) July 14, 2025
ஐம்பதாண்டு காலங்கள் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம், தென்னிந்திய திரை… pic.twitter.com/k1y1eKUJ06 -
Jul 14, 2025 12:38 IST
தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 4 பேர் நியமனம்
தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகிய 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Jul 14, 2025 12:36 IST
எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் நிலுவையில் உள்ளது? டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jul 14, 2025 12:22 IST
சரோஜா தேவி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன் - ஸ்டாலின் இரங்கல்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தென்னிந்திய திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றி படங்களை அளித்தவர். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரை துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 14, 2025 11:56 IST
இபிஎஸ் இரங்கல்
பழம்பெரும் திரைப்பட நடிகை,
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 14, 2025
"அபிநய சரஸ்வதி" என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் திருமதி. சரோஜா தேவி அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால்… -
Jul 14, 2025 11:40 IST
நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை.
— Rajinikanth (@rajinikanth) July 14, 2025
அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். 🙏🏻#SarojaDevi -
Jul 14, 2025 11:37 IST
நான் துரோகியா?... வேதனையில் துடிக்கின்றேன்... மல்லை சத்யா
அன்புத் தலைவர் வைகோ அவர்களே அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா தங்களுக்கு கிடைத்தது வேதனையில் துடிக்கின்றேன் நான். என் அன்புத் தலைவர் வைகோ அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன் இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப் போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம் அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல..
-
Jul 14, 2025 11:17 IST
இளையராஜா வழக்கு: வனிதா விஜயகுமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள Mrs & Mr திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள தனது பாடலை நீக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த வழக்கில் வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடலை பயன்படுத்தி இருப்பதாகவும், அப்பாடலை நீக்கக் கோரியும் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு.
-
Jul 14, 2025 11:16 IST
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இரங்கல்
சரோஜா தேவியின் குரல் ரசிகர்களை காந்தம் போல இழுத்தது. எல்லாரோடும் நடிச்சிட்டாங்க. கன்னடத்து நடிகையா இருந்தாலும் அவ்ளோ அழகா தமிழ் பேசுவாங்க..
சங்கர் கணேஷ், இசையமைப்பாளர்
-
Jul 14, 2025 10:59 IST
கார் ஸ்டண்ட் காட்சியின்போது உயிரிழந்த மோகன் ராஜ்: மாரி செல்வராஜ் வேதனை
சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் அண்ணன் மரணம் என்ற செய்தி இதயத்தில் அதிர்ச்சியையும் வேதனையையும் நிரப்புகிறது. வாழை இறுதிகாட்சியில் நீங்கள் அந்த லாரியை துணிச்சலாக கவிழ்த்து எல்லாரையும் கலங்கடித்த நாட்களை நெஞ்சு படபடக்க இன்று நினைத்துகொள்கிறேன். நீங்களும் உங்களின் துணிச்சலும் என்றும்… pic.twitter.com/zr9sInLrt6
— Mari Selvaraj (@mari_selvaraj) July 14, 2025 -
Jul 14, 2025 10:37 IST
பழம்பெரும் திரைப்பட நடிகை சரோஜாதேவி காலமானார்
இந்தியத் திரையுலகின் பொற்காலத்தைத் தனது வசீகர நடிப்பால் அலங்கரித்த, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இன்று (ஜூலை 14, 2025) தனது 87வது வயதில் காலமானார். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடு காரணமாக இன்று காலை 9 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் திரையுலகினர் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை அவரது மறைவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
Jul 14, 2025 10:19 IST
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
Video: Sun News
#Watch | "2026ல் அதிமுக வெற்றி பெற்று தனித்து ஆட்சியமைக்கும். ரைட்.."
— Sun News (@sunnewstamil) July 14, 2025
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி#SunNews | #ADMK | #EdappadiPalaniswami pic.twitter.com/jrBcVY0OZR -
Jul 14, 2025 09:41 IST
தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தென்மேற்கு மேற்கு வங்கம், அதனை ஒட்டி பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலவுகிறது எனவும் அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Jul 14, 2025 09:34 IST
சென்னை அடுத்த வானகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
பள்ளிகள் நிறைந்த சாலையில் மண், சவுடு லாரிகள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு உள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மீறி கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. கனரக வாகனம் சென்று வருவதால் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர் திணறல். போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Jul 14, 2025 09:10 IST
திருவல்லிக்கேணியில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய 4 பேர் கைது
திருவல்லிக்கேணி பகுதியில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 50 கிலோ கஞ்சாவை கடத்திய அபிஷேக், அப்துல் ஹாலன், ஜாகிர் உசேன், தனுஷ் ஆகியோரை போலீசாரை கைது செய்தனர்.
-
Jul 14, 2025 09:00 IST
பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் - இன்று முதல் அமல்
கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்த்து பாடம் கற்க வசதியாக பள்ளி வகுப்பறைகளில் ‘ப' வடிவில் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்கவும், `கடைசி பெஞ்ச்' முறையை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
Jul 14, 2025 08:50 IST
லண்டனில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து
லண்டனில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் 39 அடி உயரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது. விமான விபத்தைத் தொடர்ந்து லண்டன் விமானநிலையத்தில் வருகை, புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கிய நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
Jul 14, 2025 08:49 IST
காணாமல் போன டெல்லி பல்கலை. மாணவி சடலமாக மீட்பு
6 நாள்களுக்கு முன் காணாமல் போன 19 வயது டெல்லி பல்கலைக்கழக மாணவி, யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத், தெற்கு டெல்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்தார். இவர் ஜூலை 7 ஆம் தேதி காணாமல் போனதாக காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டது.
-
Jul 14, 2025 08:40 IST
கோயம்பேட்டில் சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ.10 குறைவு
கோயம்பேடு சந்தை மொத்த விற்பனையில், நேற்று வரை கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம், இன்று கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு வரத்து சற்று அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாகவும் வரும் நாட்களில் மேலும் வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
Jul 14, 2025 08:34 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19,760 கன அடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,500 கன அடியில் இருந்து 19,760 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.85 அடியாகவும், நீர் இருப்பு 93.32 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் வெளியேற்றம்.
-
Jul 14, 2025 08:29 IST
தமிழகத்தில் 6 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தமிழ்நாட்டில் நாளை முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் நாளை முதல் 20 ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது;- தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
Jul 14, 2025 08:19 IST
தமிழகத்தில் 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி
நிர்வாக காரணங்களுக்காக காவல்துறையில் அவ்வப்போது பணியிட மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் , காவல் அதிகாரிகள் சிலரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதாவது, துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் என 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, கடலூர், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த காவல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.