பெண் போலீசார், உயர் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு, வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், இவ்விழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் நேற்று இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்காக கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது நீதிபதி சரவண பாபு முன்பு சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸுக்கு 55 பக்க குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
பின்னர், வழக்கு தொடர்பாக பேசுவதற்காக வைத்த கோரிக்கையின் பேரில், இருவரும் ஐந்து நிமிடம் மட்டும் பேச நீதிபதி அனுமதி அளித்தார். தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, சவுக்கு சங்கர் நிலை தடுமாறி கீழே விழச் சென்றார். அவரை போலீசார் தாங்கிப் பிடித்தனர். குற்றப் பத்திரிகை நகல் குறித்து கேள்விகள் கேட்க அவர்களுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“