கம்யூனிச புரட்சியாளர் சே குவேராவின் மகளும், மனித உரிமை ஆர்வலருமான டாக்டர் அலெய்டா குவேரா, நாடுகளிடையே ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்து, கியூபாவுக்கு ஆதரவு அளிக்குமாறு மக்களிடம் வலியுறுத்தினார். தனது நாட்டின் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால் கியூபா சந்திக்கும் பல்வேறு போராட்டங்கள் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார்.
சே குவேரா மகள் அலெய்டா தனது மகள் எஸ்டெஃபானியாவுடன் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தபோது அவர்களுக்கு விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, அவர் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
கியூபாவுடனான ஒற்றுமைக்கான தேசியக் குழுவுடன் இணைந்து சி.பி.ஐ (எம்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் புதன்கிழமை உரையாற்றிய அலெய்டா, தனது தந்தையுடனான தனது உறவு, தனது வளர்ப்பில் தனது தாய் எவ்வாறு முக்கியப் பங்காற்றினார். தனது நாடு எப்படி அமெரிக்காவின் தடைகளுக்கு மத்தியில் போராடி வருகிறது என்பதைப் பற்றி பேசினார்.
அலெய்டா பேசும்போது, பார்வையாளர்களை தங்கள் மாநிலத்தின் (தமிழ்நாடு) பெயரை உரக்கச் சொல்லும்படி கேட்டுக் கொண்ட அலெய்டா, இந்த பொதுவான நோக்கமே அவர்களை ஒன்றிணைக்கிறது என்றார். கியூபாவிற்கு உங்களின் ஆதரவு தேவை என்று அவர் கூறினார். ஏனெனில், அமெரிக்கா பல்வேறு ஆக்கிரமிப்பு செயல்களின் மூலம் அவர்களைத் தாக்குகிறது என்று கூறினார்.
கியூபாவை உலகின் பிற பகுதிகளுடன் வர்த்தகம் செய்வதிலிருந்து அமெரிக்கா தடுத்துள்ளது என்றும் அது கியூபாவின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது என்றும் அலெய்டா குற்றம் சாட்டினார். “அமெரிக்கா எங்களுடன் வணிகம் செய்ய விரும்பவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், அவர்கள் மற்ற நாடுகளுடன் வணிகம் செய்வதிலிருந்து எங்களை கட்டுப்படுத்தினால் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் கூறினார்.
இந்தியாவில் தனக்குக் கிடைக்கும் அன்பை தன்னால் மறக்கவே முடியாது என்றும், சே குவேராவின் மகள் என்பதால் அது தனக்குத் தெரியும் என்றும் அலெய்டா கூறினார்.
சென்னையில் நடந்த இந்நிகழ்ச்சியில், சி.பி.ஐ.(எம்) கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், வி.சி.க ம.தி.மு.க., திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்றன.
தூத்துக்குடி எம்.பி.யும், தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, சே குவேராவை புரட்சியின் அடையாளம் என்று கூறினார்.
தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியிடம், அவர் சந்திக்க விரும்பும் சமகாலத் தலைவர் யார் என்று கேட்டபோது, பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா ஆகியோரின் பெயர்களைக் கூறியதை கனிமொழி நினைவு கூர்ந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”