வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சிறுத்தை தாக்கியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். சிறுத்தை வீட்டுக்குள் பதுங்கியிருப்பதால், மாவட்ட வன அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள கலர்பாளையம் பகுதியில் வேலாயுதம் என்பவரது வீடு உள்ளது. இவரது வீட்டுக்குள் நேற்று (ஏப்ரல் 14) நள்ளிரவு சிறுத்தை புகுந்தது. சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த வேலாயுதத்தின் மனைவி பிரேமா, மகன் மனோகரன், மகள் மகாலட்சுமி ஆகியோரை சிறுத்தை தாக்கியது.
சிறுத்தை தாக்கியதால் காயமடைந்த அவரக்ள் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர்கள், சிறுத்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டினர். இதையடுத்து, வீட்டுக்குள் சிறுத்தை புகுந்ததை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தக்வல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் வீட்டுக்குள் பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிப்பதற்கு வேலூர் மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டு சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, சிறுத்தை தாக்கியதால் படுகாயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுக்குள் நள்ளிரவில் சிறுத்தை புகுந்து தாக்கிய சம்பவம் குடியாத்தம் வட்டாரப் பகுதிகளில் பொது மக்கள் இடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"