மூட முடியாத மதகுகள்… வீணாகும் செம்பரம்பாக்கம் குடிநீர்: துரைமுருகன் கண்டனம்

chembarambakkam latest news: செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை மூட முடியாத காரணத்தால் குடிநீர் வீணாவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார்.

By: November 30, 2020, 9:24:41 AM

செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை மூட முடியாத காரணத்தால் சென்னை குடிநீர் வீணாவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார். மதகுகள் பராமரிப்பில் முதல்வர் கோட்டை விட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்த அறிக்கை வருமாறு: ‘நிவர்’ புயலை முன்னிட்டு – செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீரை வெளியேற்றத் திறந்துவிடப்பட்ட 2 மற்றும் 3 ஆவது மதகுகள், மூடமுடியாமல் இப்போது 400 கன அடி நீர் வீணாக வெளியே போய்க் கொண்டிருக்கிறது என்று வரும் செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது.

“முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் புயலின் சேதம் குறைந்து விட்டது” என்று போட்டி போட்டுக் கொண்டு அமைச்சர்களும், தாமும் பேட்டி கொடுத்து – பத்திரிகைகளையும் எழுத வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏன் மதகு பராமரிப்பில் இப்படி கோட்டை விட்டார்? பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் அவர் செய்த பணிதான் என்ன?

செம்பரம்பாக்கம் ஏரிக்குச் சென்று பார்த்த அவர், ஏன் இதுகுறித்தெல்லாம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தவில்லை? ஊடகங்கள் புடைசூழ அங்கு சென்றாரே எதற்கு? எல்லாமே வெற்று விளம்பரத்திற்காகத்தானா? ஏரி மதகுகளைக் கூட பராமரிக்கும் நிர்வாகத் திறமை இன்றி – முதலமைச்சராக இருந்து இந்தத் தமிழ்நாட்டை இப்படிப் பாழ்படுத்துவதா? எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் இந்த அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது.

எங்கள் கழகத் தலைவர் கூறியது போல, மக்களுக்கு எது தேவையோ அதனைச் செய்யாமல், தங்களுக்கு எது லாபமோ அதை மட்டும் செய்து கொள்ளும் அரசாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அரசு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

தமிழகத்தில் உள்ள ஏரி மதகுகளைப் பராமரிப்பதற்கென்றே நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அதன்படி அந்தப் பணிகள் நடப்பதில்லை என்பதற்கு, செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளின் நிலையே சாட்சி. தலைநகர் சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரியைப் பராமரிப்பதிலேயே இவ்வளவு அலட்சியம் என்றால், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருக்கும் ஏரிகளை இவர்கள் எந்த மாதிரிப் பராமரித்திருப்பார்கள்?

2015 பெருவெள்ளத்தின் போதும் திடீரென்று 30 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட்டு சென்னையை வெள்ளக்காடாக்கி – மக்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டது அ.தி.மு.க. அரசு. அப்போதும் செம்பரம்பாக்கம் மதகு பிரச்சினை இது மாதிரி வெடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படியொரு அவல நிலைமை இப்போதும் செம்பரம்பாக்கம் ஏரியில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ளது.

ஒரு குடம் தண்ணீருக்குத் திண்டாடிய மக்கள் இந்த மழையால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ள நிலையில் – சென்னை மக்களை மீண்டும் குடிநீருக்குத் திண்டாட வைக்கும் வகையில் 400 கன அடி நீர் வீணாகும் அவலநிலையை அ.தி.மு.க. அரசு உருவாக்கியிருப்பது கண்டனத்திற்குரியது.

எனவே, துறை அமைச்சர் என்ற முறையிலும், முதலமைச்சர் என்ற முறையிலும் உடனடியாக செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில், மதகுகளைச் சீரமைத்து மூட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு துரைமுருகன் அறிக்கை விட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chembarambakkam latest news chembarambakkam lake gates issue dmk duraimurugan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X