செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்புப் பணி காரணமாக, சென்னையின் முக்கிய பகுதிகளில் திங்கள்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்புப் பணிகளை நீர்வளத் துறையினர் மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் ஜூலை 31 ஆம் தேதி காலை 8 மணிமுதல் ஆக.1-ம் தேதி காலை 8 மணிவரை செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளில் குடிநீர்த் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி, வழக்கம்போல மேற்கொள்ளப்படும்.
மேலும், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்டபல்லாவரம், பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளுக்கும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது’ என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“