தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரன்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை பொங்கல் பரிசு திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டது.
பின்னர் உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற நிலையில், அனைத்து அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் பணம் வழங்கும் திட்டம் 2,363 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், தமிழகம் முழுவதுமுள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு திட்டம் விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
அரசு தரப்பின் விளக்கத்தைத் தொடர்ந்து, மேற்கொண்டு இவ்வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"