ஐபிஎல் போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கவுதமனுக்கு நிபந்தனை ஜாமீனில் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் கவுதமன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, கவுதமனை காவல்துறையினர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி கைது செய்தனர். சென்னை - சூளைமேடு இல்லத்தில் இயக்குநர் கவுதமனை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். கவுதமன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே தான் கைது செய்யப்பட்டதாக கவுதமன் தெரிவித்திருந்தார்.
இந்த இந்த வழக்கில் ஜாமீன் கோரி கவுதமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ்சந்திரா கவுதமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாகவும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அரியலூரில் தங்கி இருந்தது அரியலூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு கையொப்பம் இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.