மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மிக்ஜாம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கியுள்ளவர்களை மீட்புப்படையினர் படகுகள் மூலம் சென்று பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். மேலும், உணவு பொட்டலங்கள் மற்றும் பால் பாக்கெட்டுகளையும் வழங்கி வருகின்றனர். வெள்ளநீர் சூழ்ந்துள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் பகுதி வாரியாக பொறுப்பு நியமிக்கப்பட்டு நிவாரணப் பணிகள் மற்றும் மீட்பு பணிகளை தீவிரமாக கண்காணித்து செயல்படுத்தி வருகின்றனர். மின்சார வசதி, மற்றும் அடிப்படை வசதிகளை சரி செய்வதில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
இருப்பினும், சென்னையில் சில இடங்களில் தங்கள் பகுதிகளுக்கு நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை, தங்கள் பகுதியில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் சேகர்பாபு இன்று (டிசம்பர் 6) காலை சென்னை வண்ணாரப்பேட்டையில் மழை வெள்ளநீர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளைக் கேட்கச் சென்றபோது, அப்பகுதி மக்கள், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாகக் கூறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, அமைச்சர் சேகர்பாபு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து, அமைதி அடைந்தனர்.
இதே போல, சென்னை வளசரவாக்கம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழையால் பாதிகப்பட்ட மக்கள், இரண்டு நாட்களாக, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் கடந்த 2 நாட்களாக மின்சாரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வேதனை தெரிவித்தனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் தங்கள் பகுதிக்கு வந்து நிவாரணங்களை வழங்கவில்லை. மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உனடியாக செய்து தர வேண்டும் என வலியுறுத்தி வளசரவாக்கம் மக்கள் சாலை மறியலில் ஈடுப்படனர்.
வளசரவாக்கத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது தகவல் அறிந்து வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சரி செய்வதாகக் கூறினர்.
அப்போது, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சென்னையில் மழை நின்றும் அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியையோ, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையோ செய்யப்படவில்லை என்று தங்கள் பகுதியில் நிலவும் அவலநிலையைக் கூறினார்கள்.
இதே போல், சென்னை வேளச்சேரி பகுதியில் கேஸ் பங்க் விபத்து நடந்து 3 நாட்களுக்கு மேலாகியும் விபத்தில் சிக்கியவர்களை மீட்பு பணியில் ஈடுபடவில்லை எனக் கூறி விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் வேளச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேளச்சேரி பகுதியில் நடந்த கேஸ் பங்க் விபத்தில், 50 அடி ஆழம் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்த பிறகு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்த பிறகும், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையத்து, மின்சாரம் சரிசெய்த பிறகு, 6 ராட்சத மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வேளச்சேரி பகுதியில் கேஸ் பங்க் விபத்து நடந்து 3 நாட்களுக்கு மேலாகியும் விபத்தில் சிக்கியவர்களை மீட்பு பணியில் ஈடுபடவில்லை எனக் கூறி விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் வேளச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கேஸ் பங்க் விபத்தில் சிக்கிய நரேஷ் என்பவரின் உறவினர்கள் விரைந்து மீட்பு பணியை மேற்கொள்ள வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மீட்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.