செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அவர் அங்கு அடித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சீர்திருத்த பள்ளி காவலர்கள் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் கடந்த மாதம் தாம்பரம் ரயில்வே குடியிருப்பில் ரயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ஒன்றை திருடியதாக கூறி ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து கடந்த மாதம் 29-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவனை செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட சிறுவன் கடந்த 31-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் சிறுவன் உயிரிழந்ததாக சீர்திருத்த பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மகனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இது தொடர்பாக செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த காவலர் ஆனஸ்ட் ராஜ் என்பவர் சிறுவனை முதலில் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது சிறுவன் அவரது கையை கடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்குள்ள காவலர்கள் ஆனஸ்ட் ராஜ், சரண்ராஜ், விஜயகுமார், வித்யாசாகர், மோகன் மற்றும் சந்திரபாபு ஆகிய 6 பேர் சேர்ந்து சிறுவனை தாக்கியுள்ளனர். இதையடுத்து சிறுவன் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/