மாமல்லபுரம் அருகே சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகாரத்தில், பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மாமல்லபுரம் அருகே பிரபல கூலிப்படை கும்பல் தலைவனான சீர்காழி சத்யாவை கடந்த ஜூன் 28-ம் தேதி அன்று போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கோவையில் ஒரு வழக்கில் சத்யாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் தப்பியோட முயன்றதால், அவரை போலீஸார் சுட்டுப்பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடமிருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயமடைந்த சீர்காழி சத்யா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ரத்த ஓட்ட பாதிப்பு காரணமாக சீர்காழி சத்யாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகாரத்தில், பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் சிறையில் உள்ளார்.
இந்தநிலையில் சுதாகருக்கு ஜாமின் வழங்கக்கோரி அவரது வழக்கறிஞர்கள் செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தனர். விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அலெக்சிஸ் சுதாகர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்பேரில் அலெக்சிஸ் சுதாகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“