மதுராந்தகம் அருகே கோயில் தேரோட்ட திருவிழாவில் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் கொடியேற்றம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இத்திருவிழா 22 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம் ஆகும். இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சித்திராங்கதை மாலையிடு மற்றும் நாகக்கன்னி மாலையிடு உற்சவம் சமீபத்தில் நடைபெற்றது.
விழாவின் ஒரு பகுதியாக, இரும்பினால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான தேர் டிராக்டர் மூலம் இழுக்கப்பட்டு இரவு தேரோட்டம் நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக, மருத்துவமனை திடல் அருகே தேர் வந்தபோது, தாழ்வாக இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பியில் உரசியது. இந்த விபத்தில் தேர் முழுமையாக தீப்பிடித்து எரிந்து நாசமடைந்தது.
இந்த துயர சம்பவத்தில், தேருடன் வந்த ராம்குமார் என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆதிகேசவன், சிவா, ஜானகிராமன் மற்றும் குப்பன் ஆகிய நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஒரத்தி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்த்திருவிழாவின்போது நேரிட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.