செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் மருத்துவர் ஜிதேந்திரன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான மருத்துவ மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோன்று 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் பெண்ணுக்கு, மூத்த மருத்துவர் ஜிதேந்திரன் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்தாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் மருத்துவமனை முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், 50-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் மூத்த மருத்துவர் ஜிதேந்திரனை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil