செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கு: 2 பேரை என்கவுன்ட்டர் செய்த போலீசார்
Moideen and Dinesh accused in double murder case shot dead by police in encounter near Chengalpet Tamil News: செங்கல்பட்டு இரட்டை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் என்கவுன்ட்டர் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
chengalpattu Tamil News: செங்கல்பட்டில் வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய தினேஷ், மொய்தீன் ஆகிய இருவரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Advertisment
செங்கல்பட்டு கே.கே.தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் (வயது 30). இவர் நேற்று பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள காவல் நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், யாரும் எதிர்பாராத நேரத்தில் பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் உள்ளனர்.
மேலும், அவரின் தலையை உருதெரியாமல் சிதைத்துவிட்டு அந்த மர்ம கும்பல் தப்பிச்சென்றுள்ளனர். இதனால் கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரியான மகேஷ் (22) என்பவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல், அவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.
Advertisment
Advertisements
இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து அறிந்த செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் போலீசார் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இவர்களை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய அஜய் என்பவரை 2 கைகள் சிதைந்த நிலையில் மறைமலை நகரில் வைத்து தனிப்படை போலீஸ் கைது செய்தனர். மேலும், தினேஷ், மொய்தீன் ஆகிய இருவரையும் இன்று காலை மாமண்டூர் பாலாறு அருகே போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதாகவும், தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் இருவரும் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் போலீசார் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட தினேஷ், மொய்தீன் ஆகிய இருவரும் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொய்தீன் மீது 3 கொலை வழக்குகளும், தினேஷ் மீது ஒரு கொலை வழக்கும் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“