எங்கோ அல்ல... நம் சிங்காரச் சென்னையில் இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது திகைப்பையும் அதிர்வையும் ஒருசேர அள்ளித் தெளிக்கிறது!
சென்னை அமைந்தகரை பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவன் அஜித்! (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). 15 வயதான அவனுக்கு தனது தாயாரின் அண்ணன் (தாய்மாமா) மகளான 13 வயது சிறுமி மீது காதல்!
அவனது மாமா சங்கரசுப்புவும் அதே அமைந்தகரை ஏரியாவில் வெள்ளாளர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சிறு வயது முதல் அஜீத்தும் அவரது மாமா சங்கரசுப்பு வீட்டுக்கு செல்வது வழக்கம்! மாமா மகன் மற்றும் மாமா மகளுடன் விளையாடி பொழுதை கழித்திருக்கிறார்கள்.
ஆனால் 15 வயதுக்குள் அஜீத்துக்கு தனது மாமா மகள் மீது ஒருதலைக் காதல் மலர்ந்திருகிறது. இதை அரசல் புரசலாக தெரிந்துகொண்ட சங்கரசுப்புவின் மனைவி தமிழ்செல்வி, அஜீத்தை கண்டித்தார்.
இதற்கிடையே அஜீத்தின் தம்பிக்கு பிறந்த நாள் வந்திருக்கிறது. இந்த நிகழ்வுக்கு தனது மாமா மகளையும், மாமா மகனையும் அழைத்தார் அஜீத். ஆனால் அவர்கள் இருவரையும் தமிழ்செல்வி போகவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
தங்கள் வீட்டுக்கு வராதது குறித்து நேரடியாக தனது மாமா மகளை சந்தித்து கேட்டார் அஜீத். அப்போது இதை பார்த்துவிட்ட தமிழ்செல்வி, அஜித்தை அடித்திருக்கிறார். இதில் அஜீத்திற்கு ஆத்திரம் தலைக்கேறியது.
ஆகஸ்ட் 2-ம் தேதி பகல் 11 மணியளவில் தமிழ்செல்வி தனியாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நைஸாக வீட்டுக்குள் நுழைந்த அஜீத், தமிழ்செல்வியின் கழுத்தை நெரித்திருக்கிறார்.
தூக்கத்தில் இருந்து விழித்த தமிழ்செல்வி கத்துவதற்கு முயற்சிக்க, அதற்குள் அருகில் கிடந்த கரடி பொம்மையை எடுத்து தமிழ்செல்வி முகத்தில் வைத்து அழுத்தியிருக்கிறார். சற்று நேரத்தில் தமிழ்செல்வி மூச்சுத் திணறி இறந்தார்.
ஆனால் இப்படியொரு சம்பவமே நடந்ததாக காட்டிக் கொள்ளாமல், அஜீத் அவனது வீட்டுக்கு போய்விட்டான். பலசரக்கு கடை வியாபாரியான சங்கரசுப்பு பிற்பகல் 2 மணிக்கு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ந்தார் அவர்! அண்ணா நகர் போலீஸார் இது குறித்து தீவிரமாக விசாரித்து, அஜீத்தை கைது செய்திருக்கிறார்கள்!
இந்த வழக்கில் போலீஸார் துப்பு துலக்கிய விதம் அலாதியானது! இது குறித்து அண்ணா நகர் போலீஸார் கூறுகையில், ‘தமிழ்செல்வி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக முதலில் நாங்கள் நினைக்கவில்லை. காரணம், அவரது கை மணிக்கட்டில் கத்தியால் அறுக்கப்பட்டு ரத்தம் வெளியேறியிருந்தது.
எனவே சங்கரசுப்பு-தமிழ்செல்வி இடையே ஏதேனும் குடும்பப் பிரச்னை இருந்திருக்குமோ? என்றே முதலில் நினைத்தோம். வீட்டில் பணமோ, நகையோ கொள்ளை அடிக்கப்படவில்லை. எனவே நன்கு அறிமுகம் ஆனவர்கள்தான் கொலையை அரங்கேற்றியிருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தோம்.
அதன்பிறகு அக்கம்பக்கத்தில் பதிவான சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். பகல் 11.02 மணிக்கு சங்கரசுப்புவின் தங்கை மகன் அஜீத் அந்த வீட்டுக்குள் நுழைவது அதில் தெரிந்தது. வீட்டுக்குள் சென்ற அஜீத், 11.38 மணிக்கு வெளியேறுகிறான். எனவே அவனை தூக்கி விசாரித்தோம்.
முதலில் சுத்தியல் வாங்க மாமா வீட்டுக்கு சென்றதாக கதை விட்டான். பிறகு முறைப்படி விசாரித்ததும் உண்மையை கக்கினான். கழுத்தை நெரித்தும் தமிழ்செல்வி சாகாததால் கரடி பொம்மையை வைத்து அமிழ்த்தியதையும், பிறகு அவரே தற்கொலை செய்து கொண்டதாக நம்ப வைப்பதற்காக கத்தியை எடுத்து தமிழ்செல்வியின் மணிக்கட்டு நரம்புகளை வெட்டியதாகவும் கூறினான்.
தமிழ்செல்வியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் மூச்சுத் திணறி இறந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. எனவே அவர் இறந்த பிறகே மணிக்கட்டு நரம்புகளை அஜீத் அறுத்திருப்பதும் உறுதி ஆகிறது. 10-ம் வகுப்பு மாணவன் ஒருவன் இவ்வளவு வெறித்தனமாக, அதே சமயம் பக்காவாக திட்டமிட்டு கொலை செய்திருப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது’ என்றார்கள் போலீஸார்.
தமிழ்செல்வி மரணத்திற்கு பிறகு இறுதி சடங்குகள் வரை எதுவுமே தெரியாதது போல அனைத்து நிகழ்வுகளிலும் அஜீத் கலந்து கொண்டிருக்கிறான். பிரேத பரிசோதனை அறிக்கையும், சிசி டிவி காட்சிகளும்தான் அவனை வகையாக சிக்க வைத்தன.
அஜீத் மைனர் என்பதால், அவனை சென்னை கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்திருக்கிறார்கள். ஒரு சிறுவன், 35 வயது பெண்மணியை கொலை செய்துவிட்டு, கை நரம்புகளை அறுத்து தற்கொலை என காட்டுவதற்கும் முயற்சி செய்திருப்பதை போலீஸாரே நம்ப முடியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
அஜீத்களின் உருவாக்கம், தீவிரமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு சமூக நோய்!